தானியேல் 4

4
மரத்தைப்பற்றிய கனவு
1அரசன் நேபுகாத்நேச்சார்,
உலகெங்கும் வாழும் மக்களுக்கும், இனங்களுக்கும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கும் அறிவிக்கின்றதாவது:
நீங்கள் மிகவும் செழிப்புற்று வாழ்வடைவீர்களாக!
2அதிஉன்னதமான இறைவன் எனக்கு செய்த அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
3அவர் செய்த அற்புத அடையாளங்கள் எத்தனை பெரியவை!
அவருடைய அதிசயங்கள் எவ்வளவு வல்லமையானவை!
அவருடைய இராச்சியம் நித்தியமானது.
அவருடைய ஆளுகை தலைமுறை தோறும் நிலைத்திருக்கின்றது.
4நேபுகாத்நேச்சாராகிய நான், என் வீட்டில் திருப்தியுடன் இருந்தேன்; என் அரண்மனையில் செழிப்புடன் இருந்தேன். 5நான் ஒரு கனவு கண்டேன், அதனால் பயமடைந்தேன். நான் படுக்கையில் இருக்கையில் என் மனதை ஊடுருவிய காட்சிகளும், தரிசனங்களும் எனக்குத் திகிலூட்டின. 6ஆகையால், எனது கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்லும்படி பாபிலோனிலுள்ள அனைத்து ஞானிகளையும் எனக்கு முன்பாக அழைத்து வரும்படி கட்டளையிட்டேன். 7மந்திரவாதிகளும், மாந்திரீகர்களும், சோதிடரும், குறிசொல்பவர்களும் வந்தபோது, அவர்களுக்கு என் கனவைச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் விளக்கத்தை எனக்கு சொல்ல முடியவில்லை. 8இறுதியாகத் தானியேல் என் முன்பாக வந்தபோது, நான் எனது கனவை அவனிடம் சொன்னேன். அவன், பெல்தெஷாத்சார் என்னும் என் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறான். அவனுக்குள் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருக்கின்றது.
9நான் அவனிடம், “மந்திரவாதிகளுள் பிரதானமானவனே! பெல்தெஷாத்சாரே! பரிசுத்த தெய்வங்களின் ஆவி உன்னிடம் உண்டென்பதை நான் அறிவேன். ஆதலால் எந்த மறைபொருளையும் வெளிப்படுத்துவது உனக்குக் கடினமல்ல. இதுதான் எனது கனவு, அதன் விளக்கத்தைச் சொல்” என்றேன். 10நான் எனது படுக்கையில் படுத்திருக்கையில் கண்ட தரிசனங்கள் இவையே: நான் பார்த்தபோது எனக்கு முன்பாக பூமியின் நடுவில் ஒரு மரம் நின்றது. அது மிக உயரமாயிருந்தது. 11அந்த மரம் விசாலமாயும் வலுவுள்ளதாகவும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை ஆகாயத்தைத் தொட்டது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அந்த மரத்தைப் பார்க்கக் கூடியதாயிருந்தது. 12அதன் இலைகள் அழகானதாகவும், மரத்தில் பழங்கள் நிறைந்ததாகவும் காணப்பட்டது. எல்லோருக்கும் அதில் உணவு இருந்தது. அதன் கீழே காட்டுவெளியில் வாழும் மிருகங்கள் புகலிடமடைந்திருந்தன. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகளும் குடியிருந்தன. அதிலிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் உணவு கிடைத்தது.
13நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது, இதோ இந்தத் தரிசனத்தைக் கண்டேன். அதில் பரலோகத்திலிருந்து இறங்கிய ஒரு பரிசுத்த காவல் தூதர் எனக்கு முன்பாக வந்தார். 14அவர் உரத்த சத்தமிட்டு, “இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அதன் கிளைகளை அகற்றிப் போடுங்கள்; அதன் இலைகளை உதிர்த்து, பழங்களைப் பறித்தெறியுங்கள். இந்த மரத்தின் கீழுள்ள மிருகங்களெல்லாம் ஓடிப்போகட்டும். அதன் கிளைகளில் தங்கியுள்ள பறவைகளும் பறந்தோடட்டும். 15ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் எஞ்சியிருக்க விட்டுவிடுங்கள்; இரும்பினாலும் வெண்கலத்தினாலும் கலந்து செய்யப்பட்ட சங்கிலியால் சுற்றிவர கட்டப்பட்டதாக காட்டுவெளியின் புல்தரையில் அதை விட்டுவிடுங்கள்” என்றார்.
மேலும் அவர், “வானத்தின் பனியில் நனைந்து, அந்த மனிதன் பூமியிலுள்ள மிருகங்களோடு நிலத்தின் பயிர்களுக்கிடையில் வாழட்டும். 16அவனுடைய புத்தி மிருக புத்தியாக மாற்றப்பட்டு, மனித புத்தியில்லாமல் போகட்டும். ஏழு காலங்கள் அவனைக் கடந்து செல்லும்வரை இவ்வாறிருக்கட்டும்.
17“அதிஉன்னதமானவர் பூமியில் மனிதருடைய இராச்சியங்களுக்கு மேலாக ஆளுகைசெய்து, அவர் தாம் விரும்புகின்றவர்களுக்கு இராச்சியங்களைக் கொடுத்து, மக்களில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை அவற்றுக்கு மேலாக அதிகாரிகளாக நியமிக்கின்றவர் என்பதை, உலகில் வாழ்வோர் எல்லோரும் அறிந்துகொள்ளும்படி இந்தத் தீர்மானம் காவல் தூதுவர்களாலும், தீர்ப்பு பரிசுத்தர்களாலும் அறிவிக்கப்படுகிறது” என்றார்.
18“அரசனான நேபுகாத்நேச்சாராகிய நான் கண்ட கனவு இதுவே. பெல்தெஷாத்சாரே, நீ இப்போது இதன் விளக்கத்தை எனக்குச் சொல்வாயாக! ஏனெனில் என் இராச்சியத்திலுள்ள ஞானிகள் எவராலும் இதை எனக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஆனால் உன்னால் முடியும். ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உனக்குள் இருக்கின்றது” என்றான்.
தானியேல் கனவை விளக்குதல்
19அப்போது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் கலங்கி நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலூட்டின. அதைக் கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்க வேண்டாம்” என்றான்.
அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே, இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எத்தனை நலமாயிருக்கும்! 20நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாகவும், வலுவுள்ளதாகவும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது. 21அத்தோடு இலைகள் அழகானதாகவும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. காட்டுவெளியில் வாழும் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடு கட்ட இடமும் இருந்தது. 22அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் எல்லைகள் வரை விரிவடைந்திருக்கிறது.
23“அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த காவல் தூதர் ஒருவர் இறங்கி வருவதையும் கண்டீரே. அவர், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப் போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் மீதமிருக்க விட்டுவிடுங்கள்; இரும்பினாலும் வெண்கலத்தினாலும் கலந்து செய்யப்பட்ட சங்கிலியால் சுற்றிவர கட்டப்பட்டதாக காட்டுவெளியின் புல்தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அவ்வாறு ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டுமிருகங்களைப் போல் வாழட்டும்’ என்றும் சொல்லக் கேட்டீரே.
24“அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக அதிஉன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே: 25நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டுமிருகங்களோடு வாழ்வீர். மாட்டைப் போல் புல்லை மேய்ந்து, ஆகாயத்துப் பனியில் நனைவீர். அதிஉன்னதமானவரே மனிதனுடைய இராச்சியங்களின்மீது ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவனுக்கே அவர் அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும். 26ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டுவை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோக இறைவனே#4:26 பரலோக இறைவனே அல்லது பரலோகமே ஆளுகை செய்கின்றார் என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது இராச்சியம் உமக்கு மீண்டும் கொடுக்கப்படும். 27ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேட்பீராக! நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களை அகற்றிவிடுவீராக! ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடுவீராக! அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம்” என்றான்.
கனவு நிறைவேறுதல்
28அவ்வாறே இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நடந்து நிறைவேறின. 29பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒருநாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான். 30அப்போது அரசன், “நான் கட்டியெழுப்பிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டியெழுப்பினேன்” என தனக்குள் சொல்லிக்கொண்டான்.
31இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்து, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்கு தீர்ப்பிடப்பட்டுள்ளது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிட்டது. 32நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ மாடுகளைப் போல் புல்லை உண்ணும்படியாக்கப்படுவாய். அதிஉன்னதமானவர், மனிதர்களின் இராச்சியங்களின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும் வரைக்கும், ஏழு காலங்கள் கடந்துபோக வேண்டும்” என்று சொல்வதைக் கேட்டான்.
33உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மக்களிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப் போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமுடி கழுகுகளின் இறகுகளைப் போல் நீண்டு வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப் போல் வளர்ந்தன.
34அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்போது நான் அதிஉன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கின்றவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்.
அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை;
அவரது இராச்சியம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கின்றது.
35அவர் பூமியில் வாழ்கின்ற பெருந்திரள் மக்களை
ஒரு பொருட்டாய் எண்ணவில்லை.
அவர் வானத்தின் அதிகாரங்களுக்கும்,
பூமியின் மக்களுக்கும் தாம் விரும்புகின்றபடியே செய்கின்றார்.
அவரது கையைத் தடுத்து நிறுத்த வல்லவனோ,
“ஏன் இப்படிச் செய்தீர்?”
என்று கேட்கக் கூடியவனோ ஒருவனும் இல்லை.
36எனக்கு சுயபுத்தி மீண்டும் கிடைத்த அதே நேரத்தில் எனது இராச்சியத்தின் மேன்மைக்காக, எனது மாண்பும், மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன. என் ஆலோசகர்களும் உயர்குடி மக்களும் மீண்டும் என்னைத் தேடிவந்தார்கள். நான் மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டு, முன்பைவிட மேன்மையடைந்தேன். 37இப்போது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்தக்கூடியவர்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தானியேல் 4: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்