ஆமோஸ் 9
9
இஸ்ரயேல் அழிக்கப்படுதல்
1ஆண்டவர் பலிபீடத்தின் அருகே நிற்பதை நான் கண்டேன்; அவர் சொன்னதாவது:
தூண்களின் உச்சியை இடித்துப் போடுங்கள்.
அப்போது கதவு நிலைகள் அசையட்டும்.
அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மீதும் விழச் செய்யுங்கள்.
எஞ்சியிருப்போரை நான் வாளினால் கொல்வேன்.
ஒருவனும் தப்பி ஓடமாட்டான்,
ஒருவனுமே தப்ப மாட்டான்.
2பாதாளத்தின் ஆழங்கள் வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும்,
அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும்.
அவர்கள் வானங்கள் வரை ஏறினாலும்,
அங்கிருந்தும் அவர்களைக் கீழே கொண்டுவருவேன்.
3கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும்,
நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன்.
என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும்,
அவர்களைத் தீண்டுவதற்கு கடல் பாம்புக்குக் கட்டளையிடுவேன்.
4அவர்கள் தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும்,
அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன்.
“நன்மைக்காக அல்ல,
தீமைக்காகவே அவர்கள்மீது என் கண்களை வைப்பேன்.”
5சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் பூமியைத் தொடுகின்றார்,
அது உருகுகிறது,
அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்;
முழு நாடும் நைல் நதியைப் போன்று பொங்கி எழுகின்றது,
பின்னர் எகிப்தின் நதியைப் போன்று அடங்கிப் போகின்றது.
6கர்த்தர் வானங்களின் உயரே தமது அரண்மனைகளைக் கட்டுகிறார்,
அதன் அத்திவாரத்தை பூமியின்மேல் அமைக்கிறார்;
கடல்நீரை அழைத்து
பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார்.
கர்த்தர் என்பது அவரது பெயர்.
7இஸ்ரயேலின் மக்களே,
நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப் போல் அல்லவோ இருக்கின்றீர்கள்
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.
பெலிஸ்தியரை கப்தொர்#9:7 கப்தொர் – கிரேத்தா நாட்டிலிருந்தும்,
சீரியரை கீர் நாட்டிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
8“நிச்சயமாக ஆண்டவராகிய கர்த்தரின் கண்கள்
பாவம் நிறைந்த இராச்சியத்தின்மீது இருக்கின்றன.
பூமியின்மேல் இல்லாதவாறு
நான் அதை அழிப்பேன்.
எனினும் யாக்கோபின் வம்சத்தை நான் முற்றிலும் அழிக்க மாட்டேன்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
9“நானே கட்டளையிட்டு,
தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பது போல,
அனைத்து இனங்களுக்குள்ளேயும்
இஸ்ரயேல் மக்களை அரித்தெடுப்பேன்.
ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது.
10பேராபத்து எங்களை ஆட்கொள்ளவோ
சந்திக்கவோ மாட்டாது என்று சொல்கின்ற,
என் மக்களுள் வாழும் பாவிகள் எல்லோரும்
வாளினால் வெட்டப்பட்டு மரணிப்பார்கள்.
இஸ்ரேலின் மறுசீரமைப்பு
11“அந்தநாளில்
“நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீள நிர்மாணிப்பேன்.
நான் அதன் இடிபாடுகளைப் பழுதுபார்த்து,
அதன் பாழிடங்களை சீரமைத்து,
முன்னர் இருந்தது போல அதைக் கட்டுவேன்,
12அப்போது என் மக்கள்#9:12 மக்கள் – இஸ்ரயேலர் ஏதோமில் எஞ்சியிருப்போரையும்,
என் பெயரைத் தரித்திருக்கும் அனைத்து மக்களினத்தாரையும்
உரிமையாக்கிக் கொள்வார்கள் என்று
இவற்றைச் செயற்படுத்தப் போகின்ற கர்த்தர் அறிவிக்கின்றார்.
13“நாட்கள் வருகின்றன” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
“அப்போது அறுவடை செய்கின்றவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்.
நடுகிறவனை திராட்சைப்பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான்.
மலைகளிலிருந்து புது திராட்சைரசம்
வடிந்து எல்லாக் குன்றுகளின்மீதும் ஓடும்,
14நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன்.
“அவர்கள் பாழடைந்த பட்டணங்களை மீளக்கட்டியெழுப்பி, அவற்றில் குடியிருந்து,
திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து,
தோட்டங்களை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
15நான் இஸ்ரயேலரை அவர்களது சொந்த நாட்டிலே நடுவேன்.
நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து,
இனியொருபோதும் அவர்கள் வேரோடு பிடுங்கப்படுவதில்லை”
என உங்கள் இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஆமோஸ் 9: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.