ஆமோஸ் 8

8
பழுத்த பழங்களுடைய கூடை
1ஆண்டவராகிய கர்த்தர் எனக்குக் காண்பித்தது இதுவே: பழுத்த பழங்களுடைய ஒரு கூடையைக் கண்டேன். 2“ஆமோஸ், நீ எதைக் காண்கின்றாய்?” என அவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான், “பழுத்த பழங்களுடைய ஒரு கூடையைக் காண்கின்றேன்” என்றேன்.
அப்போது கர்த்தர் என்னிடம், “இஸ்ரயேலரான என் மக்களுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. நான் இனிமேலும் அவர்களைத் தப்பவிட மாட்டேன்.
3“அந்தநாளில், ஆலயப் பாடல்கள் புலம்பலாக மாறும். ஏராளமான சடலங்கள் எங்கும் வீசப்பட்டுக் கிடக்கும்! எங்கும் நிசப்தம் உண்டாகும்!” என்று ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.
4சிறுமைப்பட்டவர்களை மிதித்து,
நாட்டின் ஏழைகளை அகற்றுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
5நீங்கள் தானியம் விற்பதற்கு
மாதப்பிறப்பு எப்போது முடியும் என்றும்,
கோதுமை விற்பதற்கு
ஓய்வுநாள் எப்போது முடிவடையும் என்றும் உங்களுக்குள் கூறிக்கொண்டு,
அளவைக் குறைத்து,
விலையை அதிகரித்து,
கள்ளத் தராசினால்
வாடிக்கையாளர்களை#8:5 வாடிக்கையாளர்களை – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. ஏமாற்றக் காத்திருக்கிறீர்கள்.
6ஏழையை வெள்ளியைக் கொடுத்து வாங்குவதற்கும்#8:6 வாங்குவதற்கும் – அடிமையாக,
சிறுமைப்பட்டவர்களை ஒரு சோடி காலணிகளைக் கொடுத்து வாங்குவதற்கும்,
பதரைக் கோதுமையுடன் விற்பதற்கும் அல்லவோ காத்திருக்கிறீர்கள்.
7யாக்கோபின் மகிமையாகிய தம்மீது#8:7 மூலமொழியில் யாக்கோபின் மகிமைமீது என்றுள்ளது. கர்த்தர் ஆணையிட்டுக் கூறியதாவது: “அவர்கள் செய்த செயல்கள் எதையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
8“இதனால் நாடு நடுங்காதோ,
அதில் வாழும் அனைவரும் துயரடைய மாட்டார்களோ?
நாடு முழுவதும் நைல் நதி போல பொங்கும்.
அது குமுறிப் பொங்கி,
பின்னர் எகிப்து நதியைப் போல் தணிந்து போகும்.”
9ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றதாவது:
“அந்நாளில் நான் நண்பகலில் சூரியனை மறையச் செய்வேன்,
பட்டப்பகலில் பூமியை இருளடையச் செய்வேன்.
10உங்கள் மதக் கொண்டாட்டங்களை துக்க அனுஷ்டிப்பாகவும்,
உங்கள் பாடல்களை புலம்பல்களாகவும் மாற்றுவேன்.
உங்கள் அனைவரது இடைகளிலும் துயரஆடை அணியச் செய்வேன்.
உங்கள் தலைகளை மொட்டையடிக்கச் செய்வேன்.
நான் அந்தக் காலத்தை ஒரே மகனுக்காக
துக்கம் அனுஷ்டிக்கும் காலத்தைப் போல் மாற்றுவேன்.
அதன் முடிவை ஒரு கசப்பான நாளைப் போல் ஆக்குவேன் என்கிறார்.
11“மேலும் ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றதாவது: நாட்கள் வருகின்றன,
நாடெங்கும் பஞ்சத்தை அனுப்புவேன்.
அது உணவு கிடையாத பஞ்சமோ, தாகத்துக்குத் தண்ணீர் கிடையாத பஞ்சமோ அல்ல.
மாறாக கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கமுடியாத பஞ்சமே அது.
12அப்போது மக்கள், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரை அலைந்து சென்று,
வடதிசை தொடங்கி கிழக்குதிசை வரையும் அலைந்து திரிந்து,
கர்த்தருடைய வார்த்தையைத் தேடுவார்கள்.
ஆனால் அதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்.
13“அந்தநாளில்
“அழகிய இளம்பெண்களும்,
வலிமையுள்ள வாலிபரும் தாகத்தால் சோர்ந்து போவார்கள்.
14அக்காலத்தில் சமாரியாவின்
விக்கிரகங்களின்மீது ஆணையிடுகின்றவர்களோ,
அல்லது ‘தாண் பட்டணமே, உனது தெய்வத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்’#8:14 – மூலமொழியில் உனது தெய்வம் வாழ்வது நிச்சயம் போல, என்றுள்ளது. இது ஒரு விடயத்தை ஆணையிட்டுக் கூறும் சொற்றொடராகும்.
என்று ஆணையிடுகின்றவர்களோ,
அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்’
என்று ஆணையிடுகின்றவர்களோ எல்லோருமே மறுபடியும் வீழ்ந்து போவார்கள்;
அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க மாட்டார்கள்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆமோஸ் 8: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்