ஆமோஸ் 7

7
தரிசனங்கள்
1ஒருதடவை, ஆண்டவராகிய கர்த்தர் எனக்குக் காண்பித்தது இதுவே: அரசனுக்குரிய பங்கு அறுவடை செய்யப்பட்டதன் பின்னர் இரண்டாவது விளைச்சல் வளர்ந்து கொண்டிருந்தபோது, கர்த்தர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். 2அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் நாட்டை வெறுமையாக்கியது. அப்போது நான், “ஆண்டவராகிய கர்த்தரே, உமது மக்களை மன்னிப்பீராக! யாக்கோபு எவ்வாறு உயிர் பிழைப்பான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே!” எனக் கூறி அழுதேன்.
3எனவே கர்த்தர் தமது மனதை மாற்றிக்கொண்டார்.
“நீ பார்த்தவிதமாக இது நடக்காது” என்று கர்த்தர் சொன்னார்.
4பின்பு ஆண்டவராகிய கர்த்தர் எனக்குக் காண்பித்தது இதுவே: ஆண்டவராகிய கர்த்தர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பை நியமித்தார். அது நிலத்தின் கீழ் மகா ஆழ்கடலை வற்றிப்போகச் செய்தது; நிலத்தையும் சுட்டெரித்தது. 5அப்போது நான், “ஆண்டவராகிய கர்த்தரே, நான் கெஞ்சிக் கேட்கிறேன். இதை நிறுத்துவீராக! யாக்கோபு எவ்வாறு உயிர் தப்புவான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே” எனக் கூறி அழுதேன்.
6எனவே கர்த்தர் தமது மனதை மாற்றிக்கொண்டார்.
“இதை இந்த விதமாய் அழிய விடமாட்டேன்” என ஆண்டவராகிய கர்த்தர் சொன்னார்.
7பின்பு ஆண்டவராகிய கர்த்தர் எனக்குக் காண்பித்தது இதுவே: தூக்குநூலின்படி கட்டப்பட்ட ஒரு சுவரின் அருகில் கர்த்தர் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. 8அப்போது கர்த்தர் என்னிடம், “ஆமோஸே, நீ எதைக் காண்கின்றாய்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “தூக்குநூலைக் காண்கின்றேன்” என்றேன்.
அதற்கு ஆண்டவர், “பார், இஸ்ரயேல் என்னும் எனது மக்கள் மத்தியில் தூக்குநூலை வைக்கிறேன். நான் இனி அவர்களை தப்பவிட மாட்டேன்.
9“ஈசாக்கின் உயரமான இடங்கள்#7:9 உயரமான இடங்கள் குன்றுகளின் மீது சிலைகளை வழிபட்டுவந்த இடங்கள். அழிக்கப்படும்.
இஸ்ரயேலின் பரிசுத்த இடங்கள் பாழாக்கப்படும்.
யெரொபெயாமின் வீட்டுக்கு#7:9 யெரொபெயாமின் வீட்டுக்கு யெரொபெயாம் அரசனின் வம்சம். எதிராக நான் வாளுடன் எழுந்திடுவேன்”
என்று சொன்னார்.
ஆமோஸ் மற்றும் அமத்சியா
10அப்போது பெத்தேலின் மதகுருவான அமத்சியா, இஸ்ரயேல் அரசன் யெரொபெயாமுக்குச் சொல்லி அனுப்பிய செய்தியாவது: “இஸ்ரயேலின் மத்தியிலே உமக்கு எதிராக ஆமோஸ் சூழ்ச்சி செய்கின்றான். அவனுடைய வார்த்தைகளை நாட்டு மக்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாதிருக்கிறது. 11ஏனெனில் ஆமோஸ் சொல்வதாவது:
“ ‘யெரொபெயாம் வாளினால் வெட்டப்பட்டு மரணிப்பான்.
இஸ்ரயேலர் நிச்சயமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு,
தொலைவுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.’ ”
12அதன் பின்னர் ஆமோஸிடம் அமத்சியா, “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டுக்குத் திரும்பிப் போ; அங்கே உன் இறைவாக்கை சொல். அவர்கள் உனக்கான உணவைத் தரட்டும். 13இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கின்றது” என்றான்.
14அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல, இறைவாக்கினனின் மகனும் அல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திமரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். 15ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னைக் கர்த்தர் அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்’ என கட்டளையிட்டார். 16ஆகவே இப்போதும் நீர் கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்;
“ ‘நீ இஸ்ரயேலருக்கு விரோதமாக இறைவாக்கு சொல்லாதே,
ஈசாக்கின் வீட்டுக்கு விரோதமாய் பிரசங்கிப்பதை நிறுத்து’ என்கின்றீரே.
17“ஆதலால் கர்த்தர் உமக்குச் சொல்வது இதுவே:
“ ‘உன் மனைவி இந்த நகரத்தில் விலைமாது ஆவாள்.
உன் மகன்மாரும் மகள்மாரும் வாளால் வெட்டப்பட்டு இறப்பார்கள்.
உன் நாடும் அளக்கப்பட்டு பங்கிடப்படும்,
நீயும் இறைவனை அறியாதவர்களின் நாட்டிலே இறப்பாய்.
நிச்சயமாகவே இஸ்ரயேலர் நாடுகடத்தப்படுவார்கள்.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்.’ ”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆமோஸ் 7: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்