ஆமோஸ் 6
6
சிற்றின்பத்தின் கேடு
1சீயோனில்#6:1 சீயோனில் – எருசலேம் நகரத்தில் உல்லாசமாய் இருக்கின்றவர்களே,
சமாரியா மலையில் பாதுகாப்பாய் இருப்பதாகக் கருதுபவர்களே,
இஸ்ரயேல் மக்கள் தேடி வரும் முதன்மையான நாட்டின் உயர்குடி மக்களே,
உங்களுக்கு ஐயோ பேரழிவு,
2கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள்,
அங்கிருந்து ஆமாத் எனும் பெருநகரத்துக்குச் செல்லுங்கள்.
அதன் பின்னர் பெலிஸ்தியாவிலுள்ள காத் பட்டணத்துக்குச் செல்லுங்கள்.
உங்களது இரு இராச்சியங்களைவிட#6:2 இராச்சியங்களைவிட – யூதேயா மற்றும் இஸ்ரயேல் அவை செழிப்பில் உயர்வானவையோ?
அவர்களுடைய நாடு உங்கள் நாட்டைவிட அளவில் பெரியதோ?
3நீங்கள் அழிவின் நாளைப்பற்றி எண்ணாதிருக்கிறீர்கள்.
அதனால் வன்முறை ஆட்சியை அருகில் கொண்டுவருகின்றீர்கள்.
4தந்தம் பதித்த கட்டில்களில் படுக்கிறீர்கள்.
பஞ்சணை இருக்கைகளில் சொகுசாய் சாய்ந்திருக்கிறீர்கள்.
மந்தையில் சிறந்த செம்மறியாட்டுக்குட்டிகளையும்,
கொழுத்த கன்றுகளையும் உண்கின்றீர்கள்.
5தாவீதைப் போல் உங்கள் யாழ்களை மீட்டுகிறீர்கள்.
புதிய இசைக்கருவிகளை உண்டாக்கிக் கொள்கிறீர்கள்.
6பெரிய கிண்ணங்கள் நிறைய திராட்சைரசம் குடிக்கிறீர்கள்,
சிறந்த நறுமண தைலங்களைப் பூசிக்கொள்கிறீர்கள்;
ஆயினும் யோசேப்பின் மக்களுக்கு வரப்போகும்
அழிவு குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை.
7ஆதலால் நாடுகடத்தப்படும்போது, நீங்களே முதலாவதாக கொண்டுபோகப்படுவீர்கள்.
உங்கள் விருந்தும் களியாட்டமும் முடிவுக்கு வரும்.
இஸ்ரயேலின் தற்பெருமை
8ஆண்டவராகிய கர்த்தர் தமது பெயரில் ஆணையிட்டிருக்கிறார்; சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.
யாக்கோபின் அகந்தையை நான் அருவருக்கிறேன்.
அவனுடைய கோட்டைகளையும் வெறுக்கிறேன்.
ஆதலால் அவர்களுடைய தலைநகரத்தையும்,
அதிலுள்ள அனைத்தையும் பகைவனிடம் ஒப்புக்கொடுப்பேன்.
9அப்போது ஒரு குடும்பத்தில் பத்து பேர் எஞ்சியிருந்தால், அவர்களும் மரணிப்பார்கள். 10உடல்களை தகனம் செய்யவேண்டிய உறவினன் ஒருவன் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வந்து, அங்கு ஒளிந்திருக்கிற எவனையாவது பார்த்து, “இன்னும் எவராவது உன்னுடன் இருக்கின்றார்களா?” எனக் கேட்கும்போது அவன், “இல்லை” என்பான். மேலும் அந்த உறவினன், “சத்தமிடாதே! நாம் கர்த்தரின் பெயரை வாயால் உச்சரிக்கக் கூடாது” என்பான்.
11ஏனென்றால், கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
அவர் பெரிய வீட்டைத் துண்டுகளாகவும்
சிறிய வீட்டைத் துகள்களாவும் நொறுக்குவார்.
12கற்பாறைகளில் குதிரைகள் ஓடுமோ?
அங்கே#6:12 அங்கே – சில மொழிபெயர்ப்புகளில் கடலில் என்றுள்ளது எருதுகளால் ஒருவன் உழுவானோ?
ஆயினும் நீங்களோ நீதியை நஞ்சாகவும்,
நீதியின் பலனைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.
13லோ-தேபார்#6:13 லோ-தேபார் – ஒன்றுமில்லாமை நகரத்தைக் கைப்பற்றி மகிழ்கின்ற நீங்கள்,
“எங்கள் சொந்த வலிமையினாலே கர்னாயீம்#6:13 கர்னாயீம் – வலிமையின் அடையாளமான கொம்பு நகரத்தைக் கைப்பற்றவில்லையா?”
என்று சொல்கின்றீர்கள்.
14ஆனால் சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் அறிவிக்கின்றதாவது,
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களை எதிர்க்க ஒரு இனத்தைத் தூண்டி விடுவேன்.
அவர்கள் வடக்கில் லேபோ-ஆமாத்தின் நுழைவாயில் முதல்,
தெற்கில் அரபா பள்ளத்தாக்கு வரை உங்களை ஒடுக்குவார்கள்” என்கிறார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஆமோஸ் 6: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.