ஆமோஸ் 5
5
மனம்மாற அழைப்பு
1இஸ்ரயேல் குடும்பத்தவர்களே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக் குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்:
2“இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் வீழ்ந்துபோனாள்,
இவள் இனி ஒருபோதும் எழுந்திருக்க மாட்டாள்.
தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள்.
அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.”
3ஆண்டவராகிய கர்த்தர் இஸ்ரயேலுக்குச் சொல்வது இதுவே:
“பலம் வாய்ந்த ஆயிரம் வீரர்களுடன் அணிவகுத்துச் சென்ற பட்டணத்தில்,
நூறு வீரர்கள் மட்டுமே எஞ்சி வருவார்கள்.
பலம் வாய்ந்த நூறு வீரர்களுடன் அணிவகுத்துச் சென்ற பட்டணத்தில்,
பத்து வீரர்கள் மட்டுமே எஞ்சி வருவார்கள்.”
4இஸ்ரயேல் குடும்பத்துக்கு கர்த்தர் சொல்வது இதுவே:
என்னைத் தேடுங்கள்,#5:4 என்னைத் தேடுங்கள் – என்னிடம் திரும்பி வாருங்கள் நீங்கள் வாழ்வீர்கள்.
5பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்,
கில்காலுக்குப் போகாதீர்கள்,
பெயெர்செபாவுக்குப் பயணம் செல்லாதீர்கள்.
கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும்,
பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,
6இஸ்ரயேலின் கர்த்தரையே தேடுங்கள்,
அப்போது நீங்கள் வாழ்வீர்கள்.
இல்லையேல், யோசேப்பின் குடும்பத்தை
அவர் தீயைப் போன்று அள்ளிக்கொண்டு செல்வார்.
அந்த தீ எல்லாவற்றையும் சுட்டெரிக்கும்.
அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
7நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே,
நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, கர்த்தரையே தேடி வாழுங்கள்.
8அவரே கார்த்திகை, மிருகசீரிடம்#5:8 – அதாவது வசந்தகால மற்றும் இலையுதிர் கால நட்சத்திரக் கூட்டங்கள். ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர்.
இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும்,
பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே;
கடலின் தண்ணீரை அழைத்து,
பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே,
“கர்த்தர்” என்பது அவரது பெயர்.
9அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து,
அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார்.
10இஸ்ரயேலின் நீதிமன்றத்துக்கு
குற்றவாளியைக் கொண்டுவருகின்றவனை நீங்கள் வெறுக்கிறீர்கள்,
உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கின்றீர்கள்.
11ஏழைகளை வருத்தி, அவர்கள்மீது வரியை அதிகமாய் சுமத்தி
அவர்களது தானியத்தை பலவந்தமாய் எடுத்துக் கொள்கிறீர்கள்.
ஆகையால் செதுக்கிய கல்லினால் மாளிகைகளைக் கட்டினாலும்,
அதில் வாழமாட்டீர்கள்,
செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும்
அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்க மாட்டீர்கள்.
12உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும்,
உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன்.
நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள்.
நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதி வழங்கப்படுவதைத் தடுக்கின்றீர்கள்.
13ஆகையால் அவ்வாறான காலங்களில் விவேகமுள்ளவன் மௌனமாய் இருக்கவேண்டும்.
ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கின்றது.
14தீமையை அன்றி, நன்மையைத் தேடுங்கள்,
அப்போது நீங்கள் வாழ்வீர்கள்.
சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வது போலவே,
அவர் உங்களோடிருப்பார்.
15தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள்.
பட்டண வாயிலில் உள்ள நீதிமன்றங்களில்#5:15 நீதிமன்றங்களில் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நீதியை நிலைநிறுத்துங்கள்.
ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய கர்த்தர்,
யோசேப்பின் சந்ததியில் எஞ்சியிருப்பவர்கள்மீது இரக்கம் காட்டுவார்.
16ஆகையால் கர்த்தர், சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர் சொல்வது இதுவே:
“அனைத்து வீதிகளிலும் புலம்பல் உண்டாகியிருக்கும்.
பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாகியிருக்கும்.
அழுவதற்காக விவசாயிகளும்,
புலம்பல் பாடுவதற்காக கூலிக்குப் புலம்புகிறவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள்.
17திராட்சைத் தோட்டங்கள் அனைத்திலும் புலம்பல் உண்டாகியிருக்கும்.
ஏனெனில் நான் உங்கள் நடுவே உங்களைக் கடந்து போவேன்”
என்று கர்த்தர் சொல்கின்றார்.
கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் நாள்
18கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகின்ற
உங்களுக்கு ஐயோ பேரழிவு,
கர்த்தரின் நாளை ஏன் விரும்புகின்றீர்கள்?
அந்தநாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும்.
19ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன்,
கரடியைச் சந்தித்தது போல் அது இருக்கும்.
அவன் தன் வீட்டுக்குள் வந்து
சுவரில் கையை ஊன்றியபோது,
அவனைப் பாம்பு தீண்டியது போல் இருக்கும்.
20கர்த்தரின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாக இருக்குமல்லவோ?
ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாய் இருக்குமல்லவோ?
21உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, புறக்கணிக்கிறேன்;
உங்கள் சபை ஒன்றுகூடல்களை என்னால் சகிக்க முடியவில்லை.
22தகனபலிகளையும், தானியபலிகளையும்
நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும்,
அவற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
சமாதானபலியாக கொழுத்த மிருகங்களை நீங்கள் கொண்டுவந்தாலும்,
அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.
23உங்கள் இரைச்சல் நிறைந்த பாடல்களை என் முன்னிலையில் இருந்து அகற்றுங்கள்;
உங்கள் யாழ்களின் இசையை நான் கேட்க மாட்டேன்.
24அவற்றுக்குப் பதிலாக நீதி ஆற்றுவெள்ளம் போல புரண்டோடட்டும்.
சரியான நடத்தை வற்றாத நீரோடையைப் போல் என்றும் பெருக்கெடுக்கட்டும்.
25இஸ்ரயேல் குடும்பத்தாரே, நீங்கள் பாலைநிலத்தில் நாற்பது வருடங்களாக இருந்தபோது,
எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும்
கொண்டுவந்தீர்களா என்ன?
26ஆனால் நீங்களோ, உங்களது அரசன் என அழைத்த
சாக்குத் என்ற உருவச்சிலையையும்,
நட்சத்திர வடிவத்தில் நீங்கள் அமைத்த
கைவான் என்ற தெய்வத்தையும் சுமந்துகொண்டு வந்தீர்கள்.
27ஆதலால் நான் உங்களைத் தமஸ்கு பட்டணத்துக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று,
சேனைகளின் இறைவன் என்னும் பெயருடைய கர்த்தர் சொல்கின்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஆமோஸ் 5: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.