அப் 4:12-22
அப் 4:12-22 IRVTAM
அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான். பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.





