அப்போஸ்தலர் 4:12-22

அப்போஸ்தலர் 4:12-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அல்லாமல், வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின்கீழ், மனிதரிடையே அவருடைய பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான். பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதர் என்பதையும் தெரிந்துகொண்டபோது, அவர்கள் மலைத்துப்போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, ஆலோசனைச் சங்கத்திலிருந்து இவர்களை வெளியே போகும்படி உத்தரவிட்டபின், அவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து ஒருவரோடொருவர் கலந்து பேசினார்கள்: “நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஒரு பெரிய அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள் என்பது, எருசலேமில் வாழ்கிற அனைவருக்கும் தெரியும்; இதை நாமும் மறுக்க முடியாது. ஆனால், இது தொடர்ந்து மக்களிடையே பரவாதபடி தடைசெய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே அவர்கள் இனிமேல் யாருடனும் பேசக்கூடாது’ என்று, நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள். எனவே அவர்கள் மீண்டும் பேதுருவையும், யோவானையும் உள்ளே கூப்பிட்டு, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று? நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள். அவர்கள் மீண்டும் பேதுருவையும் யோவானையும் பயமுறுத்தியபின், அனுப்பிவிட்டார்கள். எல்லா மக்களும் நடந்த அற்புதத்திற்காக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஏனெனில், அற்புதமாய் சுகமடைந்தவன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.

அப்போஸ்தலர் 4:12-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான். பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.

அப்போஸ்தலர் 4:12-22 பரிசுத்த பைபிள் (TAERV)

மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான். பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை. அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர். எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள். நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.

அப்போஸ்தலர் 4:12-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.

அப்போஸ்தலர் 4:12-22

அப்போஸ்தலர் 4:12-22 TAOVBSIஅப்போஸ்தலர் 4:12-22 TAOVBSIஅப்போஸ்தலர் 4:12-22 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்