YouVersion Logo
Search Icon

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்Sample

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

DAY 4 OF 7

ஒப்புரவாகுதலுக்கான தடைகளை தூக்கி எறிந்துவிடு!

ஒப்புரவாகுதலுக்குத் தடையாய் இருப்பவற்றை அகற்றுவதற்கான இரண்டு படிகளை இங்கே காண்போம்:

  • முதல் படி: ஆண்டவரை முழுமையாக சார்ந்திருத்தல்.

புயலின் மத்தியில் இருந்த சீஷர்களைப்போல, நம் வாழ்வில் வரும் புயலுக்கு எதிராக நாமும் தனித்து நிற்கவேண்டிய சூழல் வரலாம். நம் பிதா அவற்றை உடனே தடுத்து நிறுத்தாமல் இருக்கலாம். நம் சொந்த பலத்தின் மூலம் நம் குடும்பத்தை நிர்வகிப்பது, ஆண்டவர் நமக்கு வாக்களித்த ஒன்றைப் பெற போராடுவது, நமக்கு அன்பானவர்களுடன் உள்ள முரண்பாட்டை சரிசெய்ய உதவி கேட்கத் துணியாமல் அதை சுமந்து கொண்டே இருப்பது போன்றவற்றின் கால இடைவெளி நம்மை சோர்வுறச் செய்யலாம். நமது கைகள் தளர்ந்து போகும்வரை நாம் தொடர்ந்து ஓடுகிறோம், அல்லது உதவி கிடைக்கும்வரை நாம் ஆண்டவரை அழைக்கிறோம். நமது தன்னிறைவே ஒப்புரவாகுதலுக்கு மோசமான எதிரியாகும்.

  • இரண்டாவது படி: மன்னிப்பது எப்படி என்று அறிந்துகொள்ளுதல்

மற்றவர்களுடனான முரண்பாடு நம்மைக் காயப்படுத்தி விடும், உணர்வுப்பூர்வமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் அது நமக்கு ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில், நாம் மேலும் காயமடைந்துவிடக்கூடாது என்பதற்காக, நம் கோபத்துடன் ஒரு கேடயம்போல ஒட்டிக்கொள்வதே நமது முதல் எதிர்வினையாக இருக்கும். ஆனால் அன்பு நிறைந்த ஆண்டவர், அவைகளை விட்டுவிடுமாறு நம்மை ஊக்குவிக்கிறார். அவர் நீதியுள்ளவர். நம்மை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மற்றவர்களைவிட அவருக்கு நன்றாகத் தெரியும்!

மன்னிப்பது என்பது ஒரு கைதியை விடுவித்து, விடுவித்த கைதியே நாம்தான் என்பதைக் கண்டுபிடிப்பதாகும்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை ஊக்குவிக்கிறேன்: "எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்." (மத்தேயு 6:12)

இன்று நீ எவ்வளவு வலிகளை தாங்கிக்கொண்டாலும், ஆண்டவருக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் என்பதே உன்னைக் குறித்த என் வாஞ்சையாய் இருக்கிறது. உன்னை முழுமையாக வாழவிடாமல் தடுக்கும் எல்லாவற்றிலிருந்தும் உன்னை விடுவிக்கும் ஆண்டவர் ஒருவர் உனக்கு இருக்கிறார்!

நாம் ஒன்றாக இணைந்து ஜெபிப்போம்... "ஆண்டவரே, உமது கிருபைக்கும் உமது அன்புக்கும் நன்றி சொல்கிறேன். ஒருபோதும் ஆக்கினைக்கு உட்படுத்தாமல், எப்போதும் என் நன்மைக்காகவே இருக்கும் உமது உபதேசங்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். உம்மை முழுவதுமாகச் சார்ந்திருக்கவும், நீர் என்னிடம் எதிர்பார்ப்பதுபோல், நான் மற்றவர்களை மன்னிக்கவும் எனக்குக் கற்றுத் தாரும். உமது சித்தத்தை தினம் தினம் செய்ய விரும்புகிறேன். நீர் என்னிடம் விரும்பும் ஒப்புரவின் வாழ்க்கையை வாழவிடாமல் தடுக்கும் அனைத்தையும் என்னைவிட்டு அகற்றுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

Scripture

About this Plan

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.

More