10
இயேசு சீடர்களை அனுப்புதல்
1இதன்பின்பு ஆண்டவர், வேறு எழுபத்திரண்டு#10:1 எழுபத்திரண்டு – சில பிரதிகளில் எழுபது பேர் என்றுள்ளது பேரை நியமித்தார். அவர்களை தாம் போக இருந்த ஒவ்வொரு பட்டணத்துக்கும், இடத்துக்கும் தமக்கு முன்பாக இரண்டிரண்டு பேராக அனுப்பினார். 2அவர் அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கின்றது, ஆனால் வேலையாட்களோ மிகச் சிலராய் இருக்கின்றார்கள். ஆகவே அறுவடை செய்ய வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையின் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள். 3புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல, நான் உங்களை அனுப்புகிறேன். 4நீங்கள் பணப்பையையோ, பயணப்பொதியையோ, காலணிகளையோ#10:4 காலணிகளையோ – இது மேலதிகமாக இன்னுமொரு சோடி காலணிகளை எடுத்துச் செல்வதைக் குறிப்பதாக இருக்கலாம். கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் ஆசி கூறவும் வேண்டாம்.
5“நீங்கள் ஒரு வீட்டுக்குள் செல்லும்போது, ‘இந்த வீட்டுக்கு சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள். 6சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பி வரும். 7நீங்கள் அந்த வீட்டிலே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் உண்டுகுடியுங்கள். ஏனெனில், வேலைக்காரன் தன் கூலிக்கு உரிமையுள்ளவனாய் இருக்கின்றான். நீங்கள் வீட்டுக்கு வீடு மாறிமாறிச் செல்ல வேண்டாம்.
8“நீங்கள் ஒரு பட்டணத்துக்குள் போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை உண்ணுங்கள். 9அங்குள்ள நோயாளிகளைக் குணமாக்குங்கள். ‘இறைவனுடைய இராச்சியம் உங்களருகே இருக்கின்றது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10ஆனால், நீங்கள் ஒரு பட்டணத்துக்குப் போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று, 11‘எங்கள் காலில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆயினும், இறைவனுடைய இராச்சியம் சமீபமாய் இருக்கின்றது என்பதை நீங்கள் நிச்சயித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள். 12நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்துக்குக் கிடைக்கப் போவதைவிட, சோதோம் பட்டணத்துக்குக் கிடைக்கும் தண்டனையானது தாங்கக் கூடியதாக இருக்கும்.
13“கோரோசீனே! உனக்கு ஐயோ பேரழிவு! பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ பேரழிவு! உங்களிடையே செய்யப்பட்ட அற்புதங்கள் தீரு,#10:13 இவை கலிலேயா ஏரியை சுற்றியுள்ள பட்டணங்கள் சீதோன் பட்டணங்களில் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் எப்பொழுதோ மனந்திரும்பி, துயரஆடை அணிந்து, சாம்பலில் அமர்ந்திருப்பார்கள்.#10:13 ஒருவர் மனம் வருந்துவதை வெளிக்காட்ட உடலை அரிக்கும் துணி உடுத்தி, சாம்பல் மேட்டில் அமர்ந்திருப்பது அக்காலத்தின் வழக்கம். 14ஆனாலும் நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட, தீருவுக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனை தாங்கக் கூடியதாக இருக்கும். 15கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளத்திற்குத் தாழ்த்தப்படுவாய்.
16“நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன், நான் சொல்வதைக் கேட்டு நடக்கின்றவனாய் இருக்கின்றான்; உங்களைப் புறக்கணிக்கின்றவன் என்னைப் புறக்கணிக்கின்றான்; என்னைப் புறக்கணிக்கின்றவன் என்னை அனுப்பியவரைப் புறக்கணிக்கின்றான்” என்றார்.
17அந்த எழுபத்திரண்டு பேரும் அவ்வாறே போய், மனமகிழ்ச்சியுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பேய்களும் எங்களுக்கு அடிபணிகின்றன” என்றார்கள்.
18அதற்குப் பதிலளித்த அவர், “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப் போல் விழுவதை நான் கண்டேன். 19பாம்புகளையும் தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய அனைத்து வல்லமையையும் வெற்றிகொள்வதற்கும் நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவும் உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. 20ஆயினும், ஆவிகள் உங்களுக்குக் அடிபணிவதைப் பற்றி மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்” என்றார்.
21அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், நான் உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்கு மிகவும் பிரியமாயிருந்தது.
22“என் பிதாவினால் அனைத்தும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பிதாவைத் தவிர, வேறு ஒருவனும் மகன் யார் என்று அறிய மாட்டான். மகனைத் தவிர, வேறு ஒருவனும் பிதா யாரென்றும் அறிய மாட்டான். பிதாவை வெளிப்படுத்த யாரையெல்லாம் மகன் தெரிவுசெய்கின்றாரோ, அவர்களைத் தவிர வேறு ஒருவரும் பிதாவை அறிய மாட்டார்கள்” என்றார்.
23பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப் பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. 24நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள், ஆனாலும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள், ஆனாலும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.”
நல்ல சமாரியன் உவமை
25அப்பொழுது, இதோ! நீதிச்சட்ட நிபுணன் ஒருவன் இயேசுவைச் சோதிப்பதற்காக எழுந்து நின்று, “போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டான்.
26அதற்கு அவர், “நீதிச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ அதில் என்ன வாசிக்கிறாய்?” என்று கேட்டார்.
27அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு பலத்துடனும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’#10:27 உபா. 6:5 அத்துடன், ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாய் இரு’ என்பதே”#10:27 லேவி. 19:18 எனப் பதிலளித்தான்.
28அப்போது இயேசு அவனிடம், “நீ சரியாக பதில் சொன்னாய். அவ்வாறே செய். அப்போது நீ வாழ்வடைவாய்” என்றார்.
29ஆனால் அவனோ தொடர்ந்தும், தன் எண்ணம் சரியெனக் காண்பிக்க விரும்பி, “என் அயலவன் யார்?” என்று இயேசுவிடம் கேட்டான்.
30அதற்கு இயேசு அவனிடம், “ஒருவன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போய்க் கொண்டிருந்தான். அப்போது அவன் கொள்ளையர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைக் களைந்து, அவனை அடித்து, குற்றுயிராய்விட்டுப் போனார்கள். 31ஒரு மதகுரு அதே வழியாய் போய்க் கொண்டிருந்தான், அவன் அந்த மனிதனைக் கண்டபோது, மறுபக்கமாய் போய் அவனைவிட்டு விலகிச் சென்றான். 32அவ்வாறே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அந்த மனிதனைக் கண்டபோது, மறுபக்கமாய் போய், அவனைவிட்டு விலகிச் சென்றான். 33ஆனால் அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன், அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டபோது, அவன்மீது அனுதாபம் கொண்டான். 34அவன் அந்த மனிதனிடம் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சைரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின் மேல் படுக்க வைத்து, ஒரு விடுதிக்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். 35மறுநாள் அவன் இரண்டு தினாரி#10:35 தினாரி – ஒரு தினாரி ஒரு நாளுக்குரிய சம்பளம் பணத்தை விடுதியின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகின்றபோது, நீ ஏதாவது அதிகமாய் செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.
36“இந்த மூன்று பேரிலும், கொள்ளையர் கையில் அகப்பட்ட அந்த மனிதனுக்கு, அயலவனாய் இருந்தது யாரென்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
37அதற்கு நீதிச்சட்ட நிபுணன், “அவன்மீது இரக்கம் காட்டியவனே” என்றான்.
அப்போது இயேசு அவனிடம், “நீயும் போய் அவ்வாறே செய்” என்றார்.
மார்த்தாளும் மரியாளும்
38இயேசுவும் அவருடைய சீடர்களும் தங்கள் பயணத்தைத் தொடர்கையில், அவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் வரவேற்று ஏற்றுக்கொண்டாள். 39அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் ஆண்டவருடைய பாதத்தின் அருகே அமர்ந்து, அவர் போதித்தவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40ஆனால் மார்த்தாளோ, அதிக வேலைப் பளுவினால் வருந்தி, இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி அனைத்து வேலையையும் என்னிடம் விட்டுவிட்டதைப்பற்றி உமக்கு கரிசனையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்வீராக” என்றாள்.
41அதற்கு ஆண்டவர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ பல காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பிப் போய் இருக்கின்றாய். 42ஆனாலும் அவசியமானது ஒன்றே. மரியாள் தன்னிடமிருந்து எடுபடாத சிறப்பானதைத் தெரிந்தெடுத்திருக்கிறாள்” என்றார்.