3
சமாதானபலி
1ஒருவன் செலுத்தும் பலி சமாதானபலியாக#3:1 சமாதானபலியாக அல்லது ஐக்கிய காணிக்கை இருந்து, அவன் தனது மந்தையிலிருந்து ஆண் மிருகத்தையோ அல்லது பெண் மிருகத்தையோ செலுத்துவதானால், கர்த்தருக்கு முன்பாக குறைபாடற்ற ஒரு மிருகத்தை அவன் ஒப்படைக்க வேண்டும். 2இறைபிரசன்னக் கூடார வாசலில், அந்த பலி மிருகத்தின் தலையின்மீது அவன் தன் கையை வைத்து, அதை வெட்டிக் கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்மாரான மதகுருக்கள், பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிப்பார்கள். 3சமாதானபலியிலிருந்து நெருப்பினால் கர்த்தருக்குச் செலுத்தப்படும் பலியாக பலி செலுத்துபவன் கொண்டுவர வேண்டியவை: உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் கொழுப்புடன், அதனுடன் உள்ள கொழுப்பு முழுவதும், 4இடுப்புக்குக் கீழ்ப் புறமாக இருக்கின்ற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும். 5ஆரோனின் மகன்மார் இவற்றைப் பலிபீடத்தில் எரிகின்ற விறகின் மேலேயுள்ள தகனபலியின்மீது வைத்து எரிப்பார்கள். இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலி.
6அவன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு மிருகத்தை சமாதானபலியாக கர்த்தருக்குச் செலுத்துவானாயின், குறைபாடற்ற ஆண் மிருகத்தையோ பெண் மிருகத்தையோ செலுத்த வேண்டும். 7அவன் ஒரு செம்மறியாட்டுக்குட்டியைச் செலுத்துவதானால், அதை கர்த்தருக்கு முன்பாகக் கொண்டுவந்து செலுத்த வேண்டும். 8அவன் தனது பலியின் தலைமீது தன் கையை வைத்து, இறைபிரசன்னக் கூடார வாசலில் அதை வெட்டிக் கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்மார் பலிபீடத்தை சுற்றிலும் தெளிப்பார்கள். 9அதன் பின்னர் சமாதானபலியிலிருந்து நெருப்பினால் கர்த்தருக்குச் செலுத்தப்படும் பலியாக அவன் கொண்டுவர வேண்டியவை: அதன் கொழுப்பும், முதுகெலும்புக்கு அருகே வெட்டியெடுக்கப்பட்ட கொழுப்புள்ள வால் முழுவதும், உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் கொழுப்புடன், அதனுடன் உள்ள கொழுப்பு முழுவதும், 10இடுப்புக்கு அருகிலிருக்கும் இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும். 11மதகுரு அவற்றைப் பலிபீடத்தின்மீது கர்த்தருக்கு உணவுப் பலியாக எரிப்பான்.
12அந்த மனிதனுடைய பலி ஒரு வெள்ளாடாக இருக்குமானால் அவன் அதை கர்த்தருக்கு முன்பாகக் கொண்டுவந்து, 13அதன் தலைமீது தன் கையை வைத்து, இறைபிரசன்னக் கூடாரத்துக்கு முன்பாக அதை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆரோனின் மகன்மார் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தை சுற்றிலும் தெளிப்பார்கள். 14அவன் தன் பலியிலிருந்து கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தவேண்டியவை: உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் கொழுப்புடன், அதனுடன் உள்ள கொழுப்பு முழுவதும், 15இடுப்புக்கு அருகிலிருக்கும் இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும். 16மதகுரு இவை எல்லாவற்றையும் பலிபீடத்தின்மீது உணவாக எரிக்க வேண்டும். இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலி. பலியிடப்படும் மிருகத்தின் கொழுப்பு முழுவதும் கர்த்தருக்கே உரியது.
17“கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக் கூடாது. நீங்கள் வாழும் இடமெல்லாம் தலைமுறை தோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கும்” என்றார்.