1
தகனபலி
1கர்த்தர் இறைபிரசன்னக் கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவருடன் பேசினார். 2“நீ இஸ்ரயேலருடன் உரையாடி, கூறவேண்டியதாவது: உங்களில் எவராவது கர்த்தருக்கு பலி செலுத்த வரும்போது, ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு பலியைக் கொண்டுவர வேண்டும்.”
3“அவன் கொடுக்கும் பலி, மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட தகனபலியானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையைக் கொடுக்க வேண்டும். அது கர்த்தரினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதை இறைபிரசன்னக் கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். 4அவன் அந்த தகனபலியின் தலைமீது தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவநிவர்த்திக்காக அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். 5கர்த்தரின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆரோனின் மகன்மாரான மதகுருக்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, இறைபிரசன்னக் கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 6பின்பு அந்த பலியைக் கொண்டுவந்தவன், தகனபலிக்கான மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்ட வேண்டும். 7ஆரோனின் மகன்மாரான மதகுருக்கள், பலிபீடத்தின்மீது நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்க வேண்டும். 8அதன் பின்னர் ஆரோனின் மகன்மாரான மதகுருக்கள் அதன் தலையையும் கொழுப்பையும் சேர்த்து, அந்தத் துண்டுகளை பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மீது அடுக்க வேண்டும். 9ஆனால் உள்ளுறுப்புகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவிய பின்பு, மதகுருக்கள் அவை எல்லாவற்றையும் பலிபீடத்தின்மீது தகனபலியாக எரித்துவிட வேண்டும். இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலியாகும்.”
10“அந்த பலி செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்பட்ட தகனபலியானால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்த வேண்டும். 11அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் கர்த்தருக்கு முன்பாக வெட்டிக் கொன்ற பின்பு, அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்மாரான மதகுருக்கள், பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிப்பார்கள். 12அவன் அதன் தலையையும் கொழுப்பையும் சேர்த்து அதைத் துண்டுகளாக வெட்ட வேண்டும். அவற்றைப் பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மீது மதகுருக்கள் அடுக்க வேண்டும். 13அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் அவன் தண்ணீரால் கழுவிய பின்பு, மதகுருக்கள் அவற்றைப் பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். இது ஒரு தகனபலி; இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலி.”
14“கர்த்தருக்கான தகனபலி பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப் புறாக் குஞ்சையோ பலியாகச் செலுத்த வேண்டும். 15மதகுருக்கள் அப்பறவையைப் பலிபீடத்துக்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரித்து, அதன் இரத்தத்தை பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிட வேண்டும். 16அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும்#1:16 இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அல்லது இரைப்பையையும் இறகுகளையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் வீசவேண்டும். 17அதன் பின்னர் மதகுருக்கள் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதை பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மீது வைத்து எரிக்க வேண்டும். இது ஒரு தகனபலி. இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலி.”