39
யோசேப்புடன் கர்த்தர் இருந்தார்
1அதேவேளையில் யோசேப்பு, எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தான். பார்வோனுடைய அதிகாரிகளில் ஒருவனும், அரசனின் மெய்க்காவலர்களின் அதிகாரியுமாகிய போத்திபார் என்னும் எகிப்தியன், யோசேப்பை அங்கு கொண்டுவந்த இஸ்மவேலரிடமிருந்து அவனை விலைக்கு வாங்கினான்.#39:1 37:36
2யோசேப்புடன் கர்த்தர் இருந்ததனால், தான் செய்த காரியங்கள் அனைத்திலும் யோசேப்பு வெற்றி பெற்றான். அவன், எகிப்தியனான தனது எஜமானுடைய வீட்டுக்குரிய பணியாளனாயிருந்தான். 3கர்த்தர் இவனோடு இருக்கின்றார் என்பதையும், இவன் செய்கின்ற யாவற்றையும் கர்த்தர் வெற்றியடையச் செய்கின்றார் என்பதையும் அவனது எஜமான் உணர்ந்துகொண்டான். 4அதனால் எஜமானின் கண்களில் யோசேப்புக்கு தயவு கிடைத்து, இவன் அவனுடைய உதவியாளன் ஆனான். போத்திபார் இவனைத் தன் வீட்டுக்குப் பொறுப்பாளனாக நியமித்து, தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் இவன் கையில்#39:4 கையில் – அதிகாரத்தின்கீழ் ஒப்படைத்தான். 5இவ்வாறாக தன்னுடைய வீட்டுக்கும், தனக்குச் சொந்தமான எல்லாவற்றுக்கும் பொறுப்பாளனாக யோசேப்பை அவன் நியமித்ததிலிருந்து, யோசேப்பின் பொருட்டு அந்த எகிப்தியனாகிய போத்திபாரின் வீட்டைக்#39:5 எகிப்தியனாகிய போத்திபாரின் வீட்டை – மூலமொழியில் எகிப்தியனின் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தார். அவனது வீட்டிலும் வயல்வெளியிலும் உள்ள எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. 6அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, இவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ, தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதுவும் குறித்து அக்கறை கொள்ளவில்லை.
யோசேப்பு நல்ல உடற்கட்டும், அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான். 7சில நாட்கள் சென்ற பின்னர், போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா!” என அழைத்தாள்.
8அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் அக்கறை கொள்ளாமல், தனக்குச் சொந்தமாக இருக்கும் அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்படைத்துள்ளார். 9இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீங்கள் அவருடைய மனைவி என்பதால் உங்களைத் தவிர, வேறொன்றையும் அவர் என் பாவனைக்கு உரியதல்ல என விலக்கி வைக்கவில்லை. அவ்வாறிருக்கையில், இவ்வாறான பெரும் தீமையை செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ய என்னால் எவ்வாறு முடியும்?” என்றான். 10அவள் நாளுக்குநாள் யோசேப்புடன் பேசி அவனை அழைத்தபோதிலும், அவளோடு படுக்கைக்குச் செல்லவோ, அவளோடு இருக்கவோ அவன் உடன்படவில்லை.
11இவ்வாறிருக்கையில், ஒருநாள் யோசேப்பு தன் கடமைகளைச் செய்வதற்காக வீட்டுக்குள் போனான். அவ்வேளையில் வீட்டுப் பணியாளர்கள் எவரும் உள்ளே இருக்கவில்லை. 12அப்போது அவள் யோசேப்பின் மேலாடையால் அவனை வளைத்துப் பிடித்து, “என்னுடன் படுக்கைக்கு வா!” என்றாள். அவனோ தன் மேலாடையை அவள் கையிலே விட்டு, வெளியே ஓடினான்.
13அவன் தன்னுடைய மேலாடையைத் தன் கையிலே விட்டு, வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, 14தன் வீட்டின் மற்றைய பணியாளர்களை வரவழைத்து, “இதைப் பாருங்கள், இந்த எபிரேயன் நம்மை அவமானப்படுத்தும்படியாக என் கணவரால்#39:14 என் கணவரால் – 17ம் வசனத்தின் அடிப்படையில், இது விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றான்! அவன் என்னுடன் பலவந்தமாக உறவுகொள்வதற்காக உள்ளே வந்தான்; ஆனால் நான் கூச்சலிட்டேன். 15நான் உதவி வேண்டி கூச்சலிட்டதை அவன் கேட்டவுடன், தன்னுடைய மேலாடையை என் அருகே விட்டு வெளியே ஓடிவிட்டான்” என்றாள்.
16அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அவள் அந்த மேலாடையைத் தன்னருகே விரித்து வைத்திருந்தாள். 17தன் கணவன் வந்ததும் அவனிடம், “நீர் நம்மிடம் கொண்டுவந்த அந்த எபிரேய அடிமை என்னை ஒரு விளையாட்டாக நடத்தும் வகையில் உள்ளே வந்தான். 18ஆனால் நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலாடையை என் அருகே விட்டு, வெளியே ஓடிவிட்டான்” என்று அதேவிதமாகக் கூறினாள்.
19“உம்முடைய அடிமை இவ்வாறுதான் என்னை நடத்தினான்” என்று தன் மனைவி தனக்குச் சொன்னவற்றை யோசேப்பின் எஜமான் கேட்டதும், அவனுக்குக் கோபம் பற்றி எரிந்தது. 20எனவே யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகள் அடைத்து வைக்கப்படும் இடத்தில்#39:20 இடத்தில் – மூலமொழியில் வட்டமான வீட்டில் அவனைப் போட்டான்.
ஆனால் யோசேப்பு சிறையில் இருக்கும்போது 21கர்த்தர் யோசேப்புடனே இருந்தார்; அவர் அவன்மீது நிலையான அன்பு செலுத்தி, சிறைக்காவல் அதிகாரியின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச் செய்தார். 22அதனால் சிறைக்காவல் அதிகாரி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லோரையும் யோசேப்பின் அதிகாரத்தின்கீழ் வைத்தான். அங்கு செய்யப்பட வேண்டிய எல்லாவற்றுக்கும் அவனையே பொறுப்பாகவும் வைத்தான். 23கர்த்தர் யோசேப்போடு இருந்து, அவன் செய்த அனைத்திலும் வெற்றியைக் கொடுத்தார்; அதனால் சிறைக்காவல் அதிகாரி யோசேப்பின் பொறுப்பிலிருந்த எதையும் மேற்பார்வை செய்யவில்லை.