ஆதியாகமம் 34

34
தீனாளும் சீகேமியர்களும்
1யாக்கோபுக்கு லேயாள் பெற்றெடுத்த மகளான தீனாள், ஒருநாள் அந்த பிரதேசத்துப் பெண்களைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டுப் போனாள். 2அவ்வேளை அந்நாட்டின் ஆட்சியாளனாகிய ஏவியர் இனத்தைச் சேர்ந்த ஏமோரின் மகன் சீகேம் அவளைக் கண்டு, அவளைக் கைப்பற்றிச் சென்று, அவளோடு பலவந்தமாக பாலுறவு கொண்டான். 3யாக்கோபின் மகள் தீனாளிடம் அவனது உள்ளம் ஈர்க்கப்பட்டது; அவன் அந்த பாலைப் பருவ இளம் பெண்ணை நேசித்து அவளுடைய உள்ளத்தைக் கவரும்படி பேசினான். 4எனவே சீகேம் தன் தந்தை ஏமோரிடம், “இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாகப் பெற்றுத் தாருங்கள்” என்றான்.
5தனது மகள் தீனாள் கறைப்படுத்தப்பட்டாள் என்ற செய்தியை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்மார் வெளியில் மந்தைகளுடன் இருந்தார்கள்; எனவே அவர்கள் வீட்டுக்கு வரும்வரை, யாக்கோபு ஒன்றும் செய்யாதிருந்தான்.
6இதற்கிடையில் சீகேமின் தந்தையான ஏமோர், யாக்கோபிடம் பேசுவதற்காகப் புறப்பட்டு வந்தான். 7நடந்ததைக் கேள்விப்பட்டதுமே யாக்கோபின் மகன்மார் மேய்ச்சல் நிலத்திலிருந்து திரும்பி வந்தனர். சீகேம், யாக்கோபின் மகளுடன் பலவந்தமாகப் பாலுறவுகொண்டு, செய்யத் தகாத அவமானமான காரியத்தை இஸ்ரயேலிலே செய்திருந்ததால், அவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.
8ஆனால் ஏமோர் அவர்களிடம், “என் மகன் சீகேம் உங்கள் மகளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான். ஆகையால் தயவுசெய்து அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். 9எங்களுடன் கலப்புத் திருமணம் செய்துகொள்ளுங்கள்; உங்கள் மகள்மாரை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்மாரை உங்களுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். 10நீங்கள் எங்கள் மத்தியில் குடியிருக்கலாம்; எங்கள் பிரதேசம் உங்களுக்கு முன்னால் இருக்கின்றது. நீங்கள் இங்கு வாழ்ந்து, விரும்பிய இடங்களுக்குச் சென்றுவருவதுடன் நிலங்களையும் வாங்கலாம்” என்றான்.
11பின்பு சீகேம், தீனாளின் தந்தையிடமும் அவளது சகோதரர்களிடமும், “உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கட்டும்; நீங்கள் கேட்பது எதுவோ, அதை நான் உங்களுக்குக் கொடுப்பேன். 12மணப்பெண்ணுக்குரிய சீதனமும், நான் கொண்டுவர வேண்டிய நன்கொடையும் எவ்வளவு என எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் கேட்பது எவ்வளவு அதிகமானாலும் அதை நான் உங்களுக்குக் கொடுப்பேன். அந்த இளம் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகக் கொடுங்கள்” என்றான்.
13தங்கள் சகோதரி தீனாளை சீகேம் கறைப்படுத்தியதால், யாக்கோபின் மகன்மார் சீகேமிடமும் அவன் தந்தை ஏமோரிடமும் பேசுகையில் வஞ்சகமாகப் பதிலளித்துச் சொன்னதாவது: 14“அவ்வாறு செய்ய முடியாது; விருத்தசேதனம் செய்யப்படாத ஒருவனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்க முடியாது. அது எங்களுக்குப் பெரிய அவமானமாய் இருக்கும். 15உங்களது ஆண்கள் அனைவரும் எங்களைப் போன்று விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும், இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் மாத்திரமே நாங்கள் இதற்கு உடன்படுவோம். 16அதன் பின்னர் நாங்கள் எங்கள் மகள்மாரை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் மகள்மாரை எங்களுக்காக எடுத்துக்கொள்வோம். நாங்கள் உங்கள் மத்தியில் குடியிருந்து, ஒரே சமுதாயமாவோம். 17விருத்தசேதனம் செய்வதற்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால், எங்கள் தங்கையை உங்களிடமிருந்து எடுத்துச் செல்வோம்” என்றார்கள்.
18அவர்களது இக்கோரிக்கை ஏமோருக்கும் அவனது மகனாகிய சீகேமுக்கும் நல்லதெனத் தோன்றியது. 19வாலிபனான சீகேம் தனது தந்தையின் வீட்டிலுள்ள எல்லோருக்குள்ளும் மதிப்புக்குரியவனாய் இருந்தான். அவன், யாக்கோபின் மகள் தீனாள்மீது அதிக ஆசை கொண்டபடியால், யாக்கோபின் மகன்மார் கேட்டதைச் செய்ய காலம் தாழ்த்தவில்லை. 20எனவே ஏமோரும் அவன் மகன் சீகேமும் தங்கள் பட்டணத்து மனிதர்களுடன் பேசுவதற்குத் தங்கள் பட்டணத்தின் வாயிலுக்கு#34:20 பட்டணத்தின் வாயிலுக்கு – இதுவே பட்டணத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்ற இடம். வந்தார்கள். 21அவர்களிடம், “இந்த மக்கள் நம்முடன் சமாதானமாக வாழ விரும்புகின்றார்கள். இவர்கள் நம் பிரதேசத்தில் வாழ்ந்து, இங்கு விரும்பிய இடங்களுக்குச் சென்றுவரட்டும். இந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கும் போதிய இடமுண்டு. நாம் அவர்களின் மகள்மாரை நமக்கு மனைவியராக எடுத்து, நம்முடைய மகள்மாரை அவர்களுக்கு மனைவியராகக் கொடுக்கலாம். 22ஆனால் நம் மத்தியிலுள்ள ஆண்கள் அவர்களைப் போன்று விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவர்களது நிபந்தனையை நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அவர்கள் நம்முடன் ஒரே சமுதாயமாக வாழ உடன்படுவார்கள். 23அப்போது, அவர்களுடைய சொத்துக்களும் கால்நடைகளும் மற்றைய அனைத்து மிருகங்களும் நமக்குச் சொந்தமாகும் அல்லவா? ஆகையால் நாம் அவர்களது நிபந்தனைக்கு உடன்படுவோம். அவர்கள் நம் மத்தியில் குடியிருப்பார்கள்” என்றார்கள்.
24ஏமோரும் அவன் மகன் சீகேமும் சொன்னவற்றை பட்டணத்து வாயிலில் ஒன்றுகூடி வந்த ஆட்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்; அதன்படி பட்டணத்திலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
25மூன்றாம் நாளில் அவர்கள் யாவரும் தொடர்ந்து விருத்தசேதனத்தினால் ஏற்பட்ட வலியுடன் இருக்கையில், தீனாளின் அண்ணன்மாரான சிமியோன், லேவி என்னும் யாக்கோபின் இரு மகன்மாரும் வாள்களுடன் போய், எவருமே தாக்குதலை எதிர்பார்த்திராத வேளையில் அந்த பட்டணத்துக்குள் நுழைந்து, அனைத்து ஆண்களையும் கொன்றுவிட்டார்கள். 26ஏமோரையும் அவன் மகன் சீகேமையும் வாளால் வெட்டிக் கொன்றபின், சீகேமின் வீட்டிலிருந்த தீனாளைத் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். 27தங்கள் சகோதரி கறைப்படுத்தப்பட்டதால், யாக்கோபின் மற்றைய மகன்மார், கொல்லப்பட்டவர்கள் கீழே கிடக்கின்றபோது அந்தப் பட்டணத்தைக் கொள்ளையடித்தார்கள். 28அவர்கள் ஆடு மாடுகளையும், கழுதைகளையும் மற்றும் பட்டணத்திலும் வெளியிலும் உள்ள அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அபகரித்தார்கள். 29அவர்கள் அங்கிருந்த அனைத்து செல்வத்தையும், பெண்கள் மற்றும் பிள்ளைகள் எல்லோரையும், வீடுகளிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டுக் கொண்டுபோனார்கள்.
30அப்போது யாக்கோபு தன் மகன்மாரான சிமியோன், லேவி ஆகியோரிடம், “இந்நாட்டில் வாழும் கானானியருக்கும் பெரிசியருக்கும் அருவருப்பான ஒருவனாக என்னை ஆக்கி, எனக்குப் பிரச்சனையை உண்டாக்கி விட்டீர்கள்! நாமோ மிகச் சிலர், அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்கினால், நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்!” என்றான்.
31அதற்கு அவர்கள், “அவ்வாறானால் அவன் எங்கள் சகோதரி தீனாளை ஒரு விலைமாதுவைப் போன்று நடத்தியிருப்பது முறையானதோ?” என்று கேட்டார்கள்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 34: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល