27
1ஈசாக்கு முதுமை அடைந்தபோது அவனால் எதையும் பார்க்க முடியாதவாறு அவனது கண்பார்வை குறைவடைந்திருந்தது. ஒருநாள் அவன் தனது மூத்த மகன் ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றான்.
அதற்கு அவன், “இதோ நான் இருக்கின்றேன்” என்றான்.
2ஈசாக்கு அவனிடம், “இதோ எனக்கு வயதாகி விட்டது, நான் மரணிக்கப்போகும் நாளும் எனக்குத் தெரியாது. 3ஆகையால், நீ உன் ஆயுதங்களான வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்துக்கொண்டு, வெளியே போய் வேட்டையாடி, 4நான் விரும்பும் சுவையுள்ள உணவாக அதைச் சமைத்து, என்னிடம் எடுத்து வா. அதை நான் சாப்பிட்டுவிட்டு, என்னுடைய மரணத்துக்கு முன்பாக நான் மனதார உனக்கு என்னுடைய ஆசீர்வாதத்தைத் தந்திடுவேன்” என்றான்.
5ஈசாக்கு தன் மகன் ஏசாவுடன் பேசியதை, ரெபேக்காள் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக் கொண்டு வருவதற்காகக் காட்டுக்குப் போனான். 6அப்போது ரெபேக்காள் தன் மகன் யாக்கோபிடம், “இதோ பார், உன்னுடைய தந்தை உன் அண்ணனான ஏசாவிடம், 7‘நீ வேட்டையாடிக் கொண்டுவந்து, நான் சாப்பிடுவதற்கு சுவையுள்ள உணவைத் தயாரித்து எடுத்து வா; நான் இறப்பதற்கு முன், கர்த்தரின் முன்பாக உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்று சொல்லக் கேட்டேன். 8என் மகனே, இப்போது நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டு நான் உனக்குச் சொல்வதைச் செய்: 9உடனே நீ ஆட்டு மந்தைக்குப் போய் இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளை என்னிடம் எடுத்து வா; அதை உன் தந்தை விரும்பும் சுவையுள்ள உணவாகச் சமைப்பேன். 10அதைக் கொண்டுபோய் அவருக்குச் சாப்பிடக் கொடு. அவர் மரணிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றாள்.
11அதற்கு யாக்கோபு தனது தாய் ரெபேக்காளிடம், “என் அண்ணன் ஏசா உரோமம் நிறைந்தவன்; என் சருமமோ உரோமம் அற்றது. 12என் தந்தை என்னைத் தொட்டுப் பார்த்து, நான் அவரை ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டால், ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக நான் என்மீது சாபத்தை வரவழைத்துக் கொள்வேன்” என்றான்.
13அவனது தாய் அவனிடம், “என் மகனே, அந்தச் சாபம் என்மீது வரட்டும்; நான் சொல்கின்றபடி நீ போய், அவற்றை என்னிடம் கொண்டுவா” என்றாள்.
14அவ்வாறே யாக்கோபு போய், அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டுவந்தான். அவள் அவற்றை அவனுடைய தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவாகச் சமைத்தாள். 15பின்பு ரெபேக்காள், வீட்டிலிருந்த தன் மூத்த மகன் ஏசாவின் மிகச் சிறந்த உடைகளை எடுத்து, அவற்றைத் தன் இளைய மகன் யாக்கோபுக்கு அணிவித்து, 16அவனுடைய கைகளையும் கழுத்தின் மிருதுவான பகுதியையும் வெள்ளாட்டுத் தோல்களினால் மறைத்தாள். 17பின்பு சமைத்த சுவையுள்ள உணவையும் அப்பங்களையும் தன் மகன் யாக்கோபிடம் கொடுத்தாள்.
18அவன் தன் தந்தையிடம் சென்று, “அப்பா” என்று அழைத்தான்.
அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான்.
19அதற்கு யாக்கோபு தன் தந்தையிடம், “நான் உங்கள் மூத்த மகன் ஏசா; நீங்கள் சொன்னபடியே நான் செய்திருக்கின்றேன். எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குத் தாருங்கள்” என்றான்.
20ஈசாக்கு தன் மகனிடம், “மகனே, இவ்வளவு விரைவில் உனக்கு இது எவ்வாறு கிடைத்தது?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “உங்கள் இறைவனாகிய கர்த்தரே எனக்கு வெற்றியைத் தந்தார்” என்றான்.
21அப்போது ஈசாக்கு யாக்கோபிடம், “என் மகனே, அருகில் வா. உண்மையாகவே நீ என் மகன் ஏசாவோ எனத் தொட்டுப் பார்க்க வேண்டும்” என்றான்.
22யாக்கோபு தன் தந்தை ஈசாக்கின் அருகில் வந்தபோது, ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து, “குரலோ யாக்கோபின் குரல், ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்” என்றான். 23ஏனெனில் அவனது கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப் போன்று அடர்ந்த உரோமமுடையனவாய் இருந்தன. எனவே வந்தவன் யார் என அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகவே, அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான். 24ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான்.
அவனும், “ஆம், நான்தான்” என்றான்.
25அப்போது ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிடும்படி அதை என்னிடம் கொண்டுவா; நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான்.
யாக்கோபு அதை அவனிடம் கொண்டுவர, அவன் அதைச் சாப்பிட்டான்; அத்துடன் அவன் எடுத்து வந்திருந்த திராட்சைரசத்தையும் ஈசாக்கு குடித்தான். 26அதன் பின்னர், அவனது தந்தையான ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.
27யாக்கோபு தன் தந்தையின் அருகில் போய் அவனை முத்தமிட்டான். ஈசாக்கு யாக்கோபினுடைய உடையின் வாசனையை முகர்ந்து, அவனை ஆசீர்வதித்து,
“ஆஹா, என் மகனின் வாசனை,
கர்த்தர் ஆசீர்வதித்த
நிலத்தின் வாசனையைப் போன்று இருக்கின்றது.
28இறைவன் உனக்கு வானத்தின் பனியையும்,
மண்ணின் வளத்தையும்,
தானியத்தையும், திராட்சைரசத்தையும் நிறைவாகத் தருவாராக.
29மக்கள் கூட்டங்கள் உனக்குப் பணி செய்யட்டும்.
பல இனங்கள் உனக்குத் தலை வணங்கட்டும்.
உன் சகோதரர்களுக்கு மேலாக நீ அவர்களை ஆளுகை செய்வாய்,
உன் தாயின் மகன்மார் உனக்குத் தலை வணங்குவார்கள்.
உன்னைச் சபிக்கின்றவர்கள் சபிக்கப்படுவார்களாக.
உன்னை ஆசீர்வதிக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக”
என்றான்.
30ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்ததும், யாக்கோபு தன் தந்தையின் முன்னிலையில் இருந்து கடந்து செல்கையில், வேட்டையாடச் சென்றிருந்த அவனது அண்ணன் ஏசா திரும்பி வந்தான். 31அவனும் சுவையுள்ள உணவைச் சமைத்து தன் தந்தையிடம் கொண்டுவந்து, “அப்பா எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.
32அப்போது ஈசாக்கு, “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான்.
அதற்கு அவன், “நான்தான் உங்களுடைய மகன்; உங்கள் மூத்த மகன் ஏசா” என்றான்.
33இதைக் கேட்டதும் அதிர்ந்த ஈசாக்கு நடுநடுங்கியவனாக, “அவ்வாறானால் வேட்டையாடிச் சமைத்த உணவை என்னிடம் கொண்டுவந்தவன் யார்? நீ வருவதற்கு சற்று முன் அதை நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே! நிச்சயமாய் அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பான்” என்றான்.
34தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டவுடனே ஏசா மனக்கசப்புற்று, சத்தமிட்டுக் கதறி அழுது தன் தந்தையிடம், “அப்பா என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான்.
35அப்போது ஈசாக்கு, “உன் இளைய சகோதரன் யாக்கோபு, உன்னுடைய ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டான்” என்றான்.
36அதைக் கேட்டதும் ஏசா தந்தையிடம், “அவனுக்கு யாக்கோபு என சரியாகத்தான் பெயரிடப்பட்டிருக்கிறது! அவன் என்னை இரண்டு முறை ஏமாற்றிவிட்டான்: அன்று என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான், இன்று என் ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டான்!” எனக் கூறிவிட்டு, “எனக்காக நீங்கள் எந்த ஆசீர்வாதத்தையும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான்.
37அதற்கு ஈசாக்கு ஏசாவிடம், “இதோ! யாக்கோபை உனது தலைவனாக நியமித்து, அவனுடைய உறவினர் அனைவரையும் அவனுக்கு பணியாளர்களாக கொடுத்து, தானியத்தினாலும் புதிய திராட்சைரசத்தினாலும் அவனை நிறைவாக்கியிருக்கின்றேன். அவ்வாறிருக்க, என் மகனே, உனக்காக நான் என்ன செய்வேன்?” என்றான்.
38அப்போது ஏசா தந்தையிடம், “அப்பா, ஒரேயொரு ஆசீர்வாதம் மட்டும்தானா உங்களிடம் இருக்கின்றது? என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி சத்தமிட்டு அழுதான்.
39அவனுடைய தந்தையாகிய ஈசாக்கு அவனிடம்,
“பூமியின் செழிப்புக்கும்
வானத்தின் பனிக்கும் தூரமாகவே
உன் குடியிருப்பு இருக்கும்.
40நீ உன் வாளினால் வாழ்ந்து,
உன் சகோதரனுக்குப் பணி செய்வாய்.
ஆனால் நீ கிளர்ந்து எழுகின்றபோது,
அவன் உன் கழுத்தின் மேல் வைத்த#27:40 அவன் உன் கழுத்தின் மேல் வைத்த – அவன் உன்மீது வைத்திருக்கும் அவனது கட்டுப்பாட்டை என்பது இதன் அர்த்தம். நுகத்தை
நீ எடுத்து எறிந்து விடுவாய்”
என்றான்.
41தன்னுடைய தந்தை, யாக்கோபுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின் காரணமாக, யாக்கோபின்மீது ஏசா பகையுணர்வு கொண்டிருந்தான். “என் தந்தை மரணித்து#27:41 என் தந்தை மரணித்து – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது., அவருக்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்கள் விரைவில் வரும். அதன் பின்னர் நான் என் இளைய சகோதரன் யாக்கோபைக் கொலை செய்வேன்” என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
42மூத்த மகன் ஏசாவின் திட்டம் ரெபேக்காளுக்குச் சொல்லப்பட்டபோது, அவள் தனது இளைய மகன் யாக்கோபை அழைத்து, “இதோ, உன் அண்ணன் ஏசா உன்னைக் கொலை செய்யும் திட்டத்தை உடையவனாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றான். 43ஆகையால் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, உடனடியாக ஆரான் என்ற இடத்திலிருக்கும் என் சகோதரன் லாபானிடம் ஓடிப் போ. 44உன் அண்ணனின் மூர்க்கம் தணியும் வரை நீ அங்கேயே தங்கியிரு. 45உன் அண்ணனின் கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்ததும், நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன். அப்போது நீ திரும்பி வரலாம். உங்கள் இருவரையும் நான் ஒரேநாளில் இழக்க வேண்டுமா?” என்றாள்.
46பின்பு ரெபேக்காள் ஈசாக்கிடம் போய், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஒருவேளை யாக்கோபு இந்தக் கானான் நாட்டில் வாழும் ஒரு ஏத்தியப் பெண்ணை தனக்கு மனைவியாக்கிக் கொண்டால், நான் உயிர் வாழ்ந்தும் பயனில்லை” என்றாள்.