22
ஆபிரகாம் சோதிக்கப்படுதல்
1இவை நடைபெற்ற சிறிது காலத்தின் பின் ஆபிரகாமை இறைவன் பரிசோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவரை அழைத்தார்.
அதற்கு அவர், “இதோ இருக்கின்றேன்” என்றார்.
2இறைவன் அவரிடம், “உன் மகனும், நீ நேசிக்கும் உன் ஒரே மகனுமான ஈசாக்கை, மோரியா பிரதேசத்துக்கு அழைத்துக்கொண்டு போ. அங்கே நான் உனக்கு சுட்டிக் காட்டுகின்ற மலை ஒன்றின்மீது அவனைத் தகனபலியிடு#22:2 தகனபலியிடு – ஒரு உயிரைக் கொன்று, தீயில் எரித்து பலியிடும் முறைமை.” என்றார்.
3ஆபிரகாம் அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மீது சேணம்#22:3 சேணம் – மிருகங்களின்மீது சவாரி செய்பவர்களுக்காக தோலினால் செய்யப்பட்ட இருக்கை. கட்டினார். அவர் தகனபலிக்கு தேவையான விறகுகளை வெட்டி எடுத்துக் கொண்டதன் பின், இறைவன் தனக்குக் குறிப்பிட்டிருந்த இடத்துக்குப் புறப்பட்டார். தன்னுடன் அவர் தனது இளம் பணியாளர்கள் இருவரையும் தன் மகன் ஈசாக்கையும் அழைத்துச் சென்றார். 4அவர்கள் பயணித்து மூன்றாம் நாள் ஆனபோது ஆபிரகாம் ஏறிட்டுப் பார்த்து, தூரத்திலிருந்து அந்த இடத்தைக் கண்டார். 5அப்போது ஆபிரகாம் தன் பணியாளர்களிடம், “நீங்கள் கழுதையுடன் இங்கே நில்லுங்கள்; நானும் என் மகனும் அந்த இடத்துக்குப் போய் வழிபாடு செய்துவிட்டு, பின்பு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.
6ஆபிரகாம் தகனபலிக்குரிய விறகுகளைத் தன் மகன் ஈசாக்கின்மேல் வைத்து, நெருப்பையும் கத்தியையும் தானே கொண்டுபோனார். அவர்கள் இருவரும் போய்க் கொண்டிருக்கும்போது, 7ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமிடம், “அப்பா?” என்றான்.
ஆபிரகாம் அதற்குப் பதிலளித்து, “என்ன மகனே?” என்றார்.
“விறகும் நெருப்பும் இருக்கின்றன, தகனபலிக்கான செம்மறியாட்டுக்குட்டி எங்கே?” என்று ஈசாக்கு கேட்டான்.
8அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக்குட்டி, அதை இறைவன் பார்த்துக் கொள்வார்” என்றார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள்.
9அவர்கள் இறைவன் குறித்த இடத்துக்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். அவர் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினார். 10பின்பு ஆபிரகாம் தன் கையை நீட்டி, தன் மகனை வெட்டுவதற்குக் கத்தியை எடுத்தார். 11அப்போது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று அவரை அழைத்தார்.
உடனே அவர், “இதோ இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
12அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனை ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல் எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார்.
13ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, தனக்குப் பின்னால் முட்செடியில் கொம்புகள் சிக்குண்டிருந்த ஒரு செம்மறியாட்டுக்கடாவைப் பார்த்தார். அவர் அங்கு போய், அந்த செம்மறியாட்டுக்கடாவைப் பிடித்து தன் மகன் ஈசாக்குக்குப் பதிலாக அதை இறைவனுக்குத் தகனபலியிட்டார். 14ஆபிரகாம் அந்த இடத்துக்கு, “யேகோவாயீரே”#22:14 யேகோவாயீரே – கர்த்தர் பார்த்துக் கொள்வார் அல்லது கர்த்தரால் கொடுக்கப்படும் என்று அர்த்தம். எனப் பெயரிட்டார். அதனால், “கர்த்தரின் மலையில் கொடுக்கப்படும்” என இன்றுவரை சொல்லப்படுகிறது.
15கர்த்தருடைய தூதனானவர் இரண்டாம் முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து, 16“நீ இப்படிச் செய்ததால், உன் ஒரேயொரு மகனாக இருந்தும் மறுத்துவிடாமல் உன் மகனைக் கொடுத்ததால், கர்த்தர் தமது பெயரைக்கொண்டு ஆணையிட்டு அறிவிக்கின்றதாவது: 17‘நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் எண்ணற்ற நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன். உன் சந்ததியினர் அவர்களுடைய பகைவரின் பட்டணங்களைக் கைப்பற்றுவார்கள். 18நீ எனக்குக் கீழ்ப்படிந்தபடியால், உன் சந்ததியினர் ஊடாக பூமியின் அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும்’ ” என்று சொன்னார்.
19அதன் பின்னர் ஆபிரகாம் தன் பணியாளர்களிடம் திரும்பிச் சென்று, அவர்களுடன் பெயெர்செபாவுக்குப் போனார். ஆபிரகாம் பெயெர்செபாவிலே தங்கினார்.
நாகோரின் மகன்மார்
20சிறிது காலத்துக்கு பின்பு, “மில்காளும் தாயாகி இருக்கின்றாள்; உன் சகோதரனாகிய நாகோருக்கு அவள் மகன்மாரைப் பெற்றெடுத்திருக்கிறாள்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது;
21அவளது மூத்த மகன் ஊஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ்,
ஆராமின் தந்தையான கேமுயேல்,
22கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்களே அவர்களாவர்.
23பெத்துவேல் ரெபேக்காளுக்குத் தந்தை ஆனான்.
மில்காள் இந்த எட்டு மகன்மாரையும் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.
24ரேயுமாள் என்னும் நாகோரின் மறுமனைவியும்:
தேபா, காஹாம், தாகாஷ், மாகா என்னும் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.