16
ஆகாரும் இஸ்மவேலும்
1அந்தக் காலகட்டத்தில் சாராய், தன் கணவன் ஆபிராமுக்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொடுக்கவில்லை. அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய அடிமைப் பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். 2எனவே சாராய், ஆபிராமிடம், “இதைக் கேட்பீராக, எனக்கு பிள்ளைப் பாக்கியத்தை கர்த்தர் தரவில்லை. ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்வீராக; ஒருவேளை அவள் மூலமாக நான் ஒரு சந்ததியை பெற்றுக்கொள்ளலாம்” என்றாள்.
சாராயின் குரலுக்குச் செவிசாய்த்து, ஆபிராம் இதற்கு இணங்கினார். 3எனவே ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்த பின்னர் அவரது மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள். 4ஆபிராம் அவளோடு உறவு கொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள்.
தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமானி சாராய் தன்னைவிடத் தாழ்ந்தவள் என்றவாறு நடந்துகொண்டாள். 5எனவே சாராய் ஆபிராமிடம், “என் பணிப்பெண்ணோடு நீர் உறவுகொள்ளும்படி#16:5 உறவுகொள்ளும்படி – எபிரேய மொழியில் மார்பில் அணைக்கும்படி என்றுள்ளது நானே அவளை உம்மிடம் கொடுத்தேன். ஆனால், அவள் தான் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்ததும் என்னை அவமதிக்கின்றாள். எனக்கு ஏற்பட்ட இந்த அநியாயத்துக்கு நீரே பொறுப்பு; உமக்கும் எனக்கும் இடையில், கர்த்தரே நியாயம் தீர்க்கட்டும்” என்றாள்.
6அதற்கு ஆபிராம், “இதோ, உன் பணிப்பெண் உன்னுடைய அதிகாரத்தின் கீழே இருக்கின்றாள்; நீ நல்லது என்று நினைப்பதை அவளுக்குச் செய்” என்றார். அதன் பின்னர் சாராய் ஆகாரைத் துன்புறுத்தினாள். அதனால் ஆகார் அவளைவிட்டு ஓடிப் போனாள்.
7கர்த்தருடைய தூதனானவர், சூர் என்ற இடத்துக்குப் போகும் பாதையோரத்தில் இருந்த நீரூற்றுக்கு அருகே பாலைநிலத்தில் ஆகாரைக் கண்டார். 8அவர் அவளிடம், “ஆகாரே, சாராயின் பணிப்பெண்ணே, நீ எங்கிருந்து வந்திருக்கின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “என் எஜமானியாகிய சாராயை விட்டு நான் ஓடிப் போகின்றேன்” என்றாள்.
9அப்போது கர்த்தருடைய தூதனானவர், “நீ உன் எஜமானியிடம் திரும்பிப் போய், அவளுக்குக் கீழ்ப்படிந்து பணிந்திரு” என்றார். 10மேலும் கர்த்தருடைய தூதனானவர், “உன் சந்ததியை நான் எண்ணிக் கணக்கிட முடியாத அளவு பெருகச் செய்வேன்” என்றார்.
11கர்த்தருடைய தூதனானவர் அவளிடம்,
“இதோ! நீ இப்போது கர்ப்பவதியாய் இருக்கின்றாய்,
உனக்கு ஒரு மகன் பிறப்பான்.
நீ அவனுக்கு இஸ்மவேல்#16:11 இஸ்மவேல் – கர்த்தர் கேட்கின்றார் என்று பெயரிடு.
ஏனெனில் கர்த்தர் உன் அழுகுரலைக் கேட்டார்.
12அவன் காட்டுக் கழுதையைப் போன்ற மனிதனாயிருப்பான்;
அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும்,
எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்;
அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக
விரோதத்துடன் வாழ்வான்”
என்றார்.
13அப்போது ஆகார், “என்னைக் காண்கின்றவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய கர்த்தருக்கு, “நீர் என்னைக் காண்கின்ற இறைவன்” என்று பெயரிட்டாள். 14அதனால் அங்கு இருந்த கிணறு, பீர்-லகாய்-ரோயி#16:14 பீர்-லகாய்-ரோயி – என்னைக் காண்கின்ற உயிருள்ளவரின் கிணறு எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும் பேரேத்துக்கும் இடையே இன்னும் இருக்கின்றது.
15ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆபிராம் அவனுக்கு இஸ்மவேல் எனப் பெயர் சூட்டினார். 16ஆகார் இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவராய் இருந்தார்.