அப்போஸ்தலர் 2

2
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்குதல்
1பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். 2அப்போது திடீரென, பலத்த காற்று வீசுவது போன்ற ஒரு சத்தம் வானத்திலிருந்து வந்து, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3மேலும், நெருப்புப் போன்று பிரிந்திருக்கும் நாவுகள், அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்வதை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
5அந்நாட்களில், உலகின்#2:5 உலகின் – கிரேக்க மொழியில் வானத்தின் கீழுள்ள என்றுள்ளது. அனைத்து நாடுகளிலிருந்தும் வந்த இறைபக்தியுள்ள யூதர்கள், எருசலேமில் தங்கியிருந்தார்கள். 6அவர்கள் அந்தச் சத்தத்தைக் கேட்டு, பெருங்கூட்டமாய் அங்கே வந்தபோது, தங்களுடைய சொந்த மொழிகளில் விசுவாசிகள்#2:6 விசுவாசிகள் – கிரேக்க மொழியில் அவர்கள் என்றுள்ளது. அப்போஸ்தலர்கள் என்றும் கருதலாம். ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். 7அவர்கள் முற்றிலும் வியப்படைந்து, “இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற இவர்கள் எல்லோரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கின்றோமே, அது எப்படி? 9பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும் மற்றும் மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லிபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும், 11இன்னும் யூதரும், யூத மார்க்கத்தைத் தழுவியவர்களும், அத்துடன் கிரேத்தரும், அரபியர்களுமாகிய நாங்கள், இறைவனின் அதிசயங்களைக் குறித்து இவர்கள் நமது மொழிகளில் பேசுவதைக் கேட்கின்றோமே!” என்றார்கள். 12அவர்கள் வியப்படைந்தவர்களாய் குழப்பத்துடன், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என சொல்லிக் கொண்டார்கள்.
13ஆயினும் சிலர், அவர்களைக் கேலி செய்து, “இவர்கள் அதிக திராட்சைரசம் குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
பேதுரு உரையாற்றுதல்
14அப்போது பேதுரு மற்றைய பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அவர்களை நோக்கி: “யூத மக்களே! எருசலேமில் வாழ்கின்றவர்களே! நான் சொல்வதைக் கவனமாய் கேட்டு இதை அறிந்துகொள்ளுங்கள். 15இந்த மனிதர்கள் நீங்கள் நினைப்பது போல் மதுபோதையில் இருப்பவர்கள் அல்ல. நேரமோ காலை ஒன்பது மணிதான் ஆகிறது! 16இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டது இப்போது நிறைவேறுகிறது:
17“ ‘இறைவன் கூறியது இதுவே,
கடைசி நாட்களில், நான் அனைத்து மக்கள்மீதும் என் ஆவியை ஊற்றுவேன்.
அப்போது உங்கள் மகன்மாரும், மகள்மாரும் இறைவாக்கு உரைப்பார்கள்.
உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்.
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
18அந்நாட்களில் எனது ஊழியர்களான ஆண்கள்மீதும் பெண்கள்மீதும்
நான் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்,
அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
19மேலே வானத்தில் நான் அதிசயங்களையும்,
கீழே பூமியில் இரத்தம், நெருப்பு,
புகைமண்டலம் ஆகிய அடையாளங்களையும் காட்டுவேன்.
20சூரியன் இருண்டு போகும்;
சந்திரன் இரத்தமாக மாறும்.
பெரிதானதும், மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே இவை நிகழும்.
21அப்போது கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற
யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’#2:21 யோவே. 2:28
22“சக இஸ்ரயேல் மனிதரே, இதைக் கேளுங்கள்: நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக்கொண்டு, இறைவன் உங்கள் மத்தியில் செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்கள் ஆகியவற்றினால் அவர் இறைவனால் அத்தாட்சி பெறப்பட்ட ஒருவர் என்பதை நிரூபித்தார். இது நீங்கள் அறிந்ததே. 23இறைவன் தாம் தீர்மானித்த நோக்கத்திற்கும், தமது முன்னறிவுக்கும் இணங்க, அவரை உங்களிடம் கையளித்தார். நீங்களோ யூதரல்லாத கொடிய மனிதரின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலை செய்தீர்கள். 24ஆனால் இறைவனோ, அவரைச் சுற்றியிருந்த, மரணத்தின் பெரும் வேதனைக் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில் அவரைப் பிடித்து வைத்திருக்கக்கூடிய வல்லமை மரணத்திற்கு இல்லை. 25தாவீது அவரைக் குறித்து கூறியிருப்பது:
“ ‘நான் கர்த்தரை எனக்கு முன்பாக எப்போதும் கண்டேன்.
அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கின்றபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.
26அதனால் என் இருதயம் சந்தோஷத்தால் பூரித்து, என் நாவு பெருமகிழ்ச்சியடைகின்றது.
என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
27ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிட்டுவிட மாட்டீர்;
உமது பரிசுத்தர் அழிவைக் காண நீர் விடமாட்டீர்.
28நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
உமது பிரசன்னத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’#2:28 சங். 16:8-11
என்பதே.
29“சகோதரரே! இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றேன். நமது முற்பிதாவான தாவீது மரணித்து அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறையும், இந்நாள்வரை இங்கே இருக்கின்றது. 30ஆனாலும் தாவீது ஒரு இறைவாக்கினனாய் இருந்து, தனது வழித்தோன்றல்களில் ஒருவரை, தனது அரியணையில் இறைவன் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அறிந்திருந்தார். 31நிகழப்போவதை அவர் முன்னரே கண்டு, மேசியாவின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசினார். அதனால் மேசியா கல்லறையில் கைவிடப்படுவதில்லை என்றும், மேசியாவின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னார். 32இயேசுவை இறைவன் உயிர் பெற்றெழச் செய்தார். அதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாய் இருக்கின்றோம். 33அவர் இறைவனின் வலதுபக்கத்தில் மேன்மை பெற்றவராய் உயர்த்தப்பட்டு, பிதா வாக்குறுதி அளித்த பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்போது காண்கின்றபடியும் கேட்கின்றபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை எம்மீது ஊற்றியிருக்கிறார். 34தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆயினும் அவர்,
“ ‘கர்த்தர் என் ஆண்டவரிடம், கூறியதாவது:
எனது வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பீராக,
35நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திருப்பீராக’#2:35 சங். 110:1
என்றாரே.
36“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் எல்லோரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே இறைவன், ஆண்டவரும் மேசியாவுமாக ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
37அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றைய அப்போஸ்தலர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
38அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி,#2:38 கிரேக்க மூலமொழியில் மனந்திரும்பி என்ற சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை கொடையாகப் பெறுவீர்கள். 39இந்த வாக்குறுதி உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லோருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப் போகின்ற எல்லோருக்கும் இது உரியது” என்றான்.
40அவன், இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்து, “இந்த கறைப்பட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை வேண்டிக்கொண்டான். 41பேதுருவின் செய்தியை ஏற்றுக்கொண்ட எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றைய தினம் திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
42அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பகிர்ந்து உண்ணுதலுக்கும், ஜெபிப்பதற்கும் தங்களை இடைவிடாது அர்ப்பணித்தவர்களாய் இருந்தார்கள். 43எல்லோரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள், அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன. 44விசுவாசிகள் எல்லோரும் ஒன்றிணைந்து, எல்லாப் பொருட்களையும் பொதுவாய் வைத்திருந்தார்கள். 45அவர்கள் தங்கள் சொத்துக்களையும் பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய்க் கொடுத்தார்கள். 46ஒவ்வொருநாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி வந்து, தங்களுடைய வீடுகளில் அப்பத்தைப் பகிர்ந்து,#2:46 அப்பத்தைப் பகிர்ந்து – ஆண்டவர் இயேசு ஏற்படுத்திய திருவிருந்தை அவர்கள் கைக்கொண்டதைக் குறிப்பதாக இது இருக்கலாம். லூக். 22:19 கபடமற்ற உள்ளத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றுசேர்ந்து சாப்பிட்டார்கள். 47அவர்கள் இறைவனைத் துதித்துவந்ததோடு, எல்லா மக்களுடைய தயவையும் பெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகின்றவர்களை கர்த்தர் ஒவ்வொருநாளும் அவர்களுடன் சேர்த்து வந்தார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

அப்போஸ்தலர் 2: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល