எண் 1
1
அத்தியாயம் 1
கணக்கெடுத்தல்
1இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: 2“நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள். 3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள். 4ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும். 5உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர். 6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல். 7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன். 8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல். 9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப். 10யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல். 11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான். 12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர். 13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல். 14காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப். 15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா. 16இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் #1:16 ஆயிரம்பேர்களுக்குத் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார். 17அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, 18இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள். 19இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான். 20இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, 21ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர். 22சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, 23சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர். 24காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர். 26யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 27யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர். 28இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 29இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர். 30செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 31செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர். 32யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 33எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர். 34மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 35மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர். 36பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர். 38தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 39தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். 40ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 41ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர். 42நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 43நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர். 44எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். 45இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும், 466,03,550 பேராயிருந்தார்கள். 47லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை. 48யெகோவா மோசேயை நோக்கி: 49“நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும், 50லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும். 51சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும். 52இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும். 53இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். 54யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
اکنون انتخاب شده:
எண் 1: IRVTam
هایلایت
به اشتراک گذاشتن
مقایسه
کپی
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.