சகரியா 9
9
இஸ்ரயேலின் பகைவருக்கு நியாயத்தீர்ப்பு
1ஒரு இறைவெளிப்பாடு:
கர்த்தருடைய வார்த்தை ஹதெராக் நாட்டுக்கு விரோதமாயும்,
தமஸ்கு பட்டணத்தின்மீதும் இருக்கும்.
ஏனெனில் அனைத்து மக்களினதும், அனைத்து இஸ்ரயேல் கோத்திரங்களினதும் கண்கள்
கர்த்தரையே நோக்கிக் கொண்டிருக்கின்றன.
2அதன் எல்லையாக உள்ள ஆமாத் பிரதேசமும்,
ஞானம் மிக்கதாக இருப்பினும் தீரு மற்றும் சீதோன் பட்டணங்களும்
அவற்றில் உள்ளடங்கும்.
3தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள்.
அவள் வெள்ளியைத் தூசியைப் போலவும்,
தங்கத்தைத் தெருக்களின் அழுக்கைப் போலவும் குவித்து வைத்திருக்கிறாள்.
4ஆனால் ஆண்டவர் அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப்போட்டு,
கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்து விடுவார்.
அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள்.
5அஸ்கலோன் பட்டணம் அதைக் கண்டு அஞ்சும்;
காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும்.
எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப் போகும்.
காசா தன் அரசனை இழப்பாள்;
அஸ்கலோன் பாழாய்ப் போகும்.
6பல்லின மக்கள் அஸ்தோத் பட்டணத்தில் குடியிருப்பார்கள்.
நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாதொழிப்பேன்.
7இரத்தம் வடியும் இறைச்சியை அவர்களின் வாயிலிருந்தும்,
அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்;
தப்பியிருப்பவர்கள் நம் இறைவனுக்கு உரியவர்களாகி,
யூதாவின் ஒரு கோத்திரத்தைப் போலாவார்கள்.
எக்ரோன் எபூசியரைப் போல் ஆகும்.
8ஆனால் நான் என் ஆலயத்தைச் சுற்றிப் பாதுகாப்பதால்,
ஆக்கிரமிப்பாளர்கள் அதனுள்ளே செல்வதில்லை.
நான் என் மக்களைக் கண்காணிப்பதால்,
ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ள மாட்டார்கள்.
சீயோன் அரசனின் வருகை
9சீயோன் மகளே, நீ மிகவும் களிகூர்ந்திடு.
எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி.
இதோ பார், உன் அரசர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் உன்னிடம் வருகின்றார்;
தாழ்மையுள்ள அவர், கழுதையின்மீதும்
கழுதைக்குட்டியாகிய மறியின்மீதும் ஏறி வருகின்றார்.
10எப்பிராயீமிலிருந்து தேர்களையும்,
எருசலேமிலிருந்து போர்க்குதிரைகளையும் அகற்றுவேன்.
யுத்த வில்லும் முறிக்கப்படும்.
அவர் இனங்களுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்;
அவரது ஆட்சி ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும்,
யூப்பிரட்டீஸ் நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் பரந்திருக்கும்.
11உனக்கோவெனில், உன்னுடன் நான் செய்துகொண்ட
என் உடன்படிக்கையின் இரத்தத்தின் பொருட்டு,
தண்ணீரில்லாத குழியில் அடைபட்டுள்ள உன் கைதிகளை விடுதலை செய்வேன்.
12எதிர்பார்ப்புள்ள கைதிகளே, உங்கள் கோட்டைக்குத் திரும்புங்கள்.
நீங்கள் இழந்தவற்றை இரண்டு மடங்காகத் திரும்பவும் தருவேன் என
நான் இப்போதும் உங்களுக்கு அறிவிக்கின்றேன்.
13நான் எனது வில்லை வளைப்பது போல், யூதாவை வளைத்து,
எப்பிராயீமை அதன் அம்பாக வைப்பேன்;
சீயோனே, உன் மகன்மாரை நான் எழுப்புவேன்.
கிரேக்க நாடே, அவர்களை உன் மகன்மாருக்கு விரோதமாய் அனுப்புவேன்.
என் மக்களைப் போர்வீரனின் வாளைப் போல் ஆக்குவேன்.
கர்த்தர் காட்சியளிப்பார்
14அப்போது கர்த்தர் தமது மக்களுக்கு மேலாகக் காட்சியளிப்பார்;
அவரது அம்பு மின்னலைப் போல் விரையும்.
ஆண்டவராகிய கர்த்தர் எக்காளத் தொனியை எழுப்புவார்.
அவர் தென்திசைச் சுழல்காற்றில் கம்பீரமாய் வருவார்.
15சேனைகளின் கர்த்தர் மக்களைப் பாதுகாப்பார்.
அவர்கள் தமது பகைவர்களை அழித்து,
கவண் கற்களால் தாக்கி வெற்றி பெறுவார்கள்.
அப்போது அவர்கள் திராட்சை மதுவினால் களிப்படைந்து ஆரவாரித்து,
பலிபீடத்தின் மூலைகளில் தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிண்ணத்தைப் போல்
நிரம்பியிருப்பார்கள்.
16அந்தநாளில், ஒரு மேய்ப்பன் தனது மந்தையைப் பாதுகாப்பது போல
அவர்களுடைய இறைவனாகிய கர்த்தர் தமது மக்களைப் பாதுகாப்பார்.
அவர்கள் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் போல,
அவரது நாட்டில் மின்னுவார்கள்.
17அவரது கருணை எவ்வளவு உயர்ந்தது! அவரது அழகு எவ்வளவு உயர்ந்தது!
தானியம் வாலிபரையும்,
புதிய திராட்சைரசம் இளம் பெண்களையும் செழிக்கச் செய்யும்.
Currently Selected:
சகரியா 9: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.