சகரியா 8
8
எருசலேமுக்கு ஆசீர்வாதம்
1சேனைகளின் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் எனக்கு வந்தது.
2சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “நான் சீயோன்மீது அதிதீவிர வைராக்கியத்துடன் வைராக்கியமாய் இருக்கின்றேன்; நான் அவளுக்காகக் கடும் கோபத்துடன் வைராக்கியமாய் இருக்கின்றேன்.”
3கர்த்தர் சொல்வது இதுவே: “நான் சீயோனுக்குத் திரும்பி வந்து எருசலேமில் குடியிருப்பேன். அப்போது எருசலேமானது சத்தியத்தின் நகரம் என்றும், சேனைகளின் கர்த்தரின் மலையானது பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும்.”
4சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “மறுபடியும் எருசலேமின் வீதிகளில் முதுமைவயதுள்ள ஆண்களும் பெண்களும், தமது முதுமைவயதின் காரணமாக கைகளில் ஊன்றுகோலுடன் உட்கார்ந்திருப்பார்கள். 5விளையாடும் சிறுவர்களாலும் சிறுமிகளாலும் நகர வீதிகள் நிறைந்திருக்கும்.”
6சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “அந்நாட்களில் இந்த மக்களில் எஞ்சி இருப்பவர்களுக்கு அது புதுமையாகத் தோன்றினாலும், அது என் பார்வையில் புதுமையாக இருக்குமோ?” என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
7சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “இதோ, நான் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளிலிருந்து என் மக்களை மீட்பேன். 8நான் மறுபடியும் அவர்களை எருசலேமில் குடியிருப்பதற்கு அழைத்து வருவேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு உண்மையும் நீதியுமுள்ள இறைவனாய் இருப்பேன்.”
9சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “சேனைகளின் கர்த்தரின் ஆலயத்துக்கு அத்திவாரமிட்ட நாட்களில், ‘ஆலயம் கட்டியெழுப்பப்படும்படி உங்கள் கைகள் பலமடையட்டும்’ என்று சொன்ன இறைவாக்கினர்களின் வார்த்தைகளை இப்போது கேட்கின்றீர்கள். 10அந்த நாட்களுக்கு முன்னர் மனிதனுக்கோ மிருகத்துக்கோ கூலி கொடுக்கப்படவில்லை. ஒவ்வொருவனையும் அவனது அயலவனுக்கு எதிராக நான் திருப்பிவிட்டிருந்தபடியால், ஒருவனும் தன் எதிரியின் பொருட்டு பாதுகாப்பாகத் தனது தொழிலுக்குச் செல்ல முடியாதிருந்தது. 11ஆனால் நான் முன்னைய நாட்களில் நடந்துகொண்டது போல, இந்த மக்களில் எஞ்சியிருப்போருடன் இப்பொழுது நடந்துகொள்ளப் போவதில்லை” என்று சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
12“இனி விதைக்கப்பட்டது நன்கு வளரும், திராட்சைக்கொடி தன் பலனைக் கொடுக்கும், நிலம் அதன் விளைச்சலைக் கொடுக்கும்; வானங்கள் பனியைப் பொழியும், எஞ்சியிருக்கும் மக்களுக்கு நான் இவற்றையெல்லாம் உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். 13யூதாவே, இஸ்ரயேலே, நீங்கள் இனங்களுக்கிடையே சாபத்துக்குரியவர்களாய்#8:13 சாபத்துக்குரியவர்களாய் – ஒருவரையொருவர் சபிப்பதற்கு உங்கள் பெயர் பயன்படுத்தப்பட்டது. எரே. 29:22 இருந்தாலும், நான் உங்களை மீட்பேன்; நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்#8:13 ஆசீர்வாதமாயிருப்பீர்கள் – ஆசீர்வதிக்கும்போது உங்கள் பெயர் பயன்படுத்தப்படும். ஆதி. 48:20. உங்கள் கைகளைப் பலப்படுத்துங்கள், பயப்படாதிருங்கள்.”
14சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டியபோது உங்கள்மீது தீங்கு செய்ய நினைத்து, இரக்கம் காட்டாதிருந்தேன். 15பயப்படாதிருங்கள், நான் இந்நாட்களில் யூதாவுக்கும் எருசலேமுக்கும் திரும்பவும் நன்மை செய்யத் தீர்மானித்துள்ளேன். 16ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இவையே: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையை பேசி, நீதிமன்றங்களில் உண்மையாயும் நீதியாயும் தீர்ப்பு வழங்குங்கள். 17நீங்கள் ஒருவருக்கொருவர் சதித்திட்டம் தீட்டவோ, பொய்ச்சத்தியம் செய்யவோ பிரியப்பட வேண்டாம். இவையனைத்தையும் நான் வெறுக்கிறேன்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
18சேனைகளின் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் எனக்கு வந்தது.
19சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில் நீங்கள் அனுஷ்டிக்கும் உபவாசங்கள் யூதா மக்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிற கொண்டாட்டங்களாகவும், மகிழ்ச்சிதரும் பண்டிகைகளாகவும் மாறும். ஆதலால் உண்மையையும் சமாதானத்தையும் விரும்புங்கள்.”
20மேலும் சேனைகளின் கர்த்தர் சொல்வதாவது: “பல்லின மக்களும், பல நகரக் குடிகளும் எருசலேமுக்கு வருவார்கள். 21அப்போது ஒரு நகரத்தின் குடிகள் இன்னொரு நகரத்துக்குப் போய், ‘சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தரின் தயவுக்காக அவரை மன்றாடவும் நாங்கள் செல்கின்றோம், நீங்களும் வாருங்கள்’ என்று சொல்வார்கள். 22எனவே அநேக மக்கள் கூட்டத்தினரும், வலிமைவாய்ந்த பிற இனங்களைச் சேர்ந்தோரும் சேனைகளின் கர்த்தரின் பிரசன்னத்தைத் தேடி, அவரின் தயவை நாட எருசலேமுக்கு வருவார்கள்.”
23சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “அந்நாட்களில் பல மொழி பேசும் பல இனங்களிலுமிருந்து பத்து மனிதர்கள் ஒரு யூதனின் ஆடையின் நுனியைப் பற்றிப்பிடித்து, ‘இறைவன் உங்களோடிருக்கின்றார் எனக் கேள்விப்பட்டோம்; அதனால் நாங்களும், உங்களுடனே வருகின்றோம்’ என்று சொல்வார்கள்.”
Currently Selected:
சகரியா 8: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.