சகரியா 4
4
தங்க குத்துவிளக்கும் இரு ஒலிவ மரங்களும்
1என்னோடு பேசிய தூதன் மறுபடியும் திரும்பி வந்து, உறக்கத்தில் இருக்கின்றவனை எழுப்புவது போல் என்னை எழுப்பினான். 2அவன் என்னிடம், “நீ காண்பது என்ன?” என்று கேட்டான்.
அதற்கு நான், “முழுவதும் தங்கத்தினாலான குத்துவிளக்கினைக் காண்கின்றேன், அதன் உச்சியில் ஒரு கிண்ணமும், ஏழு அகல் விளக்குகளும், அந்த விளக்குகளுக்கான ஏழு குழாய்களும் இருக்கின்றன. 3மேலும் அந்த குத்துவிளக்கின் அருகில் இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. ஒன்று கிண்ணத்தின் வலதுபக்கத்திலும், மற்றொன்று அதன் இடதுபக்கத்திலும் இருக்கின்றது” என்று பதிலுரைத்தேன்.
4என்னுடன் பேசிய தூதனிடம் நான், “ஆண்டவனே, இவை என்ன?” என்று கேட்டேன்.
5அதற்கு அந்தத் தூதன், “இவை என்னவென்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.
நான், “தெரியாது ஆண்டவனே” என்றேன்.
6எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு#4:6 செருபாபேலுக்கு – யூதாவின் ஆளுநராக இருந்தவர். தாவீது அரசனின் வழித்தோன்றல். ஆகா. 1:1 வந்த கர்த்தருடைய வார்த்தை இதுவே: ‘வலிமையினாலும் அல்ல; வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்’ என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
7“மாபெரும் மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலின் முன்பாக நீ சமதரையாவாய். அதன் பின்னர், செருபாபேல் ஆலயத்தின் தலைக்கல்லைக் கொண்டுவரும்போது ‘கிருபை! கிருபை உண்டாகட்டும்!’ என்று மக்கள் ஆர்ப்பரிப்பார்கள்” என்றான்.
8அப்போது கர்த்தருடைய வார்த்தை எனக்கு வந்தது: 9அவர், “செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அத்திவாரத்தை இட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டி முடிக்கும். அப்போது சேனைகளின் கர்த்தரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
10“சிறிய காரியங்களின் நாளை அற்பமாய் எண்ணுகிறவன் மகிழ்ச்சியடைந்து, செருபாபேலின் கையில் உள்ள தூக்குநூலைக் காண்பான். இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்க்கின்ற கர்த்தரின் கண்கள்” என்றார்.
11அப்போது நான் அந்தத் தூதனிடம், “குத்துவிளக்கின் வலதுபக்கத்திலும், இடதுபக்கத்திலும் இருக்கும் ஒலிவமரங்கள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்று கேட்டேன்.
12திரும்பவும் நான் அவனிடம், “தங்க நிறமான எண்ணெயை வடியவிடும் தங்கக் குழாய்கள் இரண்டினது அருகில் காணப்படும் ஒலிவ மரக் கிளைகள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்றும் கேட்டேன்.
13அதற்கு அவன், “இவை என்னவென்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.
நான், “தெரியாது, ஆண்டவனே!” என்றேன்.
14எனவே அவன், “இவர்கள் இருவரும் பூமி முழுவதற்கும் ஆண்டவராக இருப்பவருக்கு ஊழியம் செய்யும்படி அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்” என்றான்.
Currently Selected:
சகரியா 4: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.