ரோமர் 7
7
திருமண வாழ்விலிருந்து உதாரணம்
1பிரியமானவர்களே, நீதிச்சட்டத்தை அறிந்தவர்களிடமே நான் பேசுகின்றேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் காலம் மட்டுமே நீதிச்சட்டம் அவன்மீது அதிகாரம் செலுத்துகின்றதென்று உங்களுக்குத் தெரியாதா? 2திருமணமான ஒரு பெண் அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, நீதிச்சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் மரணித்துவிட்டால், அந்த திருமணத்துக்குரிய நீதிச்சட்டங்களில் இருந்து அவள் விடுபடுகின்றாள். 3எனவே தன் கணவன் உயிருடன் இருக்கையில் இன்னொருவருடன் இணைந்தால், அவள் நடத்தை கெட்டவள் என அழைக்கப்படுவாள். ஆனால் அவளுடைய கணவன் மரணித்தால் அவள் நீதிச்சட்டத்திலிருந்து விடுவிக்கப்படுவதால், அவள் இன்னொருவருடன் இணையும்போது அவள் நடத்தை கெட்டவள் அல்ல.
4எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் வேறொருவருக்கு உரியவர்களாகும்படி, அதாவது மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கு உரியவர்களாகும்படி, நீங்களும் அவ்வாறே கிறிஸ்துவின் உடலின் ஊடாக நீதிச்சட்டத்திற்கு மரணித்தவர்களாக்கப்பட்டீர்கள். இது நாம் அனைவரும் இறைவனுக்கு கனி கொடுப்பதற்காகவே. 5நாம் பாவமனித இயல்பில்#7:5 பாவமனித இயல்பில் – கிரேக்க மொழியில் மாம்சம். இது மனிதனுடைய பாவ நிலை மற்றும் ஆவியானவரை எதிர்த்து நிற்கின்ற சக்தி என்பவைகளைக் குறிக்கின்றது. வாழ்ந்திருந்தபோது, நீதிச்சட்டத்தினாலே தூண்டப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய அங்கங்களில் செயலாற்றி, மரணத்திற்கு கனிகொடுத்தன. 6ஆனால் இப்பொழுதோ, எழுதப்பட்ட பழைய சட்டத்தின்படி இல்லாமல் ஆவியானவரின் புதிய வழியின்படி நாம் அவருக்குப் பணி செய்யும்படியாக, நம்மைச் சிக்கவைத்திருந்த நீதிச்சட்டத்திற்கு மரணித்து, அதிலிருந்து விடுவிக்கப்பட்டோம்.
நீதிச்சட்டமும் பாவமும்
7அவ்வாறானால் நாம் என்ன சொல்வோம்? நீதிச்சட்டம் பாவமா? இல்லவே இல்லை! மாறாக, நீதிச்சட்டம் இல்லாதிருந்தால் பாவத்தை நான் புரிந்துகொண்டிருக்க மாட்டேன். உண்மையில், “பிறருக்குரியவற்றில் ஆசைகொள்ளாதே”#7:7 யாத். 20:17; உபா. 5:21 என்று நீதிச்சட்டம் சொல்லாதிருந்திருந்தால், பிறருக்குரியவற்றில் ஆசைகொள்வதை நான் அறிந்திருக்க மாட்டேன். 8ஆனால் பாவமானது, கட்டளையின் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எனக்குள்ளே எல்லாவிதமான தவறான ஆசைகளையும் உண்டாக்கியது. ஏனெனில் நீதிச்சட்டம் இல்லாவிட்டால் பாவம், உயிரற்ற சடலம். 9ஒரு காலத்தில் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது நான் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் கட்டளை வந்தபோது, பாவம் புத்துயிர் பெற்றது, நானோ உயிரிழந்தேன். 10வாழ்வளிப்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டளை எனக்கு மரணத்தைக் கொண்டுவந்ததைக் காண முடிந்தது. 11ஏனெனில், கட்டளையின் மூலமாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவம் பயன்படுத்தி, என்னை ஏமாற்றி, அந்த கட்டளையின் மூலமாக என்னைக் கொன்றது. 12எனவே நீதிச்சட்டம் பரிசுத்தமானது. கட்டளை பரிசுத்தமும், நியாயமும், நல்லதுமானது.
13அவ்வாறானால் நன்மையான ஒன்று, எனக்கு மரணமாயிற்றா? இல்லவே இல்லை. மாறாக, எது பாவம் என்பதை உணர்த்துவதற்காக, பாவமே நன்மையான ஒன்றின் மூலம் எனக்கு மரணத்தை ஏற்படுத்தியது. கட்டளையின் மூலமாக பாவம் மிக அதிகமாய் பாவமானதாக வெளிப்படும்படி#7:13 பாவமானதாக வெளிப்படும்படி – கிரேக்க மொழியில் பாவமாகும்படி இவ்வாறானது.
14ஏனெனில் நீதிச்சட்டம் ஆவிக்குரியது என்பதை நாம் அறிவோம். ஆனால் நானோ சரீர இயல்புள்ளவனாகவும், பாவத்துக்கு விற்கப்பட்டவனாகவும் இருக்கின்றேன். 15நான் செய்கின்றதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகின்றதைச் செய்யாமல், நான் வெறுக்கின்றதையே செய்கின்றேன். 16நான் செய்ய விரும்பாததை செய்வேனாயின், நீதிச்சட்டம் நல்லது என்பதை அங்கீகரிக்கிறேன். 17எனவே இனி செயல்படுவது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே என்னை இப்படிச் செயல்பட வைக்கின்றது. 18ஏனெனில், என்னில் அதாவது என் மனித இயல்பில், நன்மை குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நன்மையானதைச் செய்ய வேண்டுமென்ற விருப்பம் என்னில் இருந்தும், அதனை நிறைவேற்றும்தன்மை என்னில் இல்லை. 19நான் செய்ய விரும்புகின்ற நன்மையானதைச் செய்யாமல் செய்ய விரும்பாத தீமையானதைச் செய்துவருகின்றேன். 20நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அவ்வாறு செய்வது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே அதைச் செய்கின்றது.
21எனக்குள்ளே இப்படியான ஒரு நியதி செயற்படுகின்றதைக் காண்கின்றேன். நான் நன்மையானதைச் செய்ய விரும்பும் போதெல்லாம், தீமையானதும் என்னுள்ளே நெருங்கி இருக்கின்றது. 22என்னுடைய உள்ளார்ந்த மனிதனைப் பொறுத்தவரை, இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன். 23ஆனால் என் அங்கங்களில் வேறொரு முறைமையைக் காண்கின்றேன். அது எனது மனதின் முறைமைக்கு எதிராகப் போராடி, என் அங்கங்களில் இருக்கின்ற பாவ முறைமைக்கு என்னை அடிமைப்படுத்துகின்றது. 24பரிதாபகரமான மனிதன் நான்! இந்த மரண உடலில் இருந்து யார் என்னைத் தப்பிக்க வைப்பார்? 25நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இறைவனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்!
எனவே, ஒரு பக்கத்தில் நான் என் மனதினாலே இறைவனுடைய நீதிச்சட்டத்துக்குப் பணிசெய்கின்றேன், மறுபக்கத்திலோ என்னுடைய சரீரத்தினாலே பாவத்துக்குப் பணிசெய்கின்றேன்.
Currently Selected:
ரோமர் 7: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
