Bible App logo
Search Icon

ரோமர் 6

6
கிறிஸ்துவில் வாழ்வு
1ஆகவே நாம் இப்படிச் சொல்லலாமா? கிருபை அதிகமாக பெருகுவதற்காக தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருப்போம் எனலாமா? 2அது கூடவே கூடாது! பாவத்திற்கு மரணித்துவிட்ட நாம் இனி தொடர்ந்தும் பாவத்தில் வாழ்வது எப்படி? 3கிறிஸ்து இயேசுவில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட எல்லோரும், அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறியாதிருக்கின்றீர்களா? 4பிதாவின் மகிமையினால், மரணித்தோரிலிருந்து கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டது போன்று, நாமும் புதிதான ஒரு வாழ்வில் நடக்கும்படியாக, ஞானஸ்நானத்தின் மூலமாக மரணத்துக்குள் கிறிஸ்துவுடன் அடக்கம் செய்யப்பட்டோம்.
5இவ்விதமாய், நாம் அவருடைய மரணத்திற்கு ஒப்பான மரணத்தில் அவருடன் இணைக்கப்பட்டிருந்தால், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு ஒப்பான உயிர்த்தெழுதலிலும் அவருடன் இணைக்கப்பட்டிருப்போம் என்பது உறுதி. 6பாவத்திற்கு அடிமையாயிருந்த மனித இயல்பு, அதன் வல்லமையை இழந்து போகும்படியாக, நம்முடைய பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டு மரணித்துவிட்டான்#6:6 அறையப்பட்டு மரணித்துவிட்டான் – கிரேக்க மொழியில், அறையப்பட்டான் என்பதை நாம் அறிவோம். இனி ஒருபோதும் நாம் பாவத்திற்கு அடிமைகளாக இராதபடிக்கே இப்படிச் செய்யப்பட்டது. 7ஏனெனில் மரணித்தவன் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறான்#6:7 விடுவிக்கப்பட்டிருக்கிறான் – கிரேக்க மொழியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றான்.
8நாம் கிறிஸ்துவோடு மரணித்துப் போயிருந்தால், அவரோடு இணைந்து வாழவும் செய்வோம் என்றும் விசுவாசிக்கின்றோம். 9கிறிஸ்து மரணித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருப்பதால், அவர் இனிமேல் மரணிப்பதில்லை என்பதை அறிந்திருக்கின்றோம். மரணத்துக்கு இனி அவர்மீது அதிகாரம் இல்லை. 10அவர் மரணித்தது பாவத்துக்கு, அதற்காக ஒரேதடவையே மரணித்தார்; ஆனால் அவர் இப்போது வாழ்வது, இறைவனுக்கென்றே ஆகும்.
11அதேபோல நீங்களும் பாவத்தைப் பொறுத்தவரையில் மரணித்தவர்களாகவும், கிறிஸ்து இயேசுவுக்குள் இறைவனுக்காக உயிரோடிருக்கின்றவர்களாகவும் உங்களைக் கணக்கிடுங்கள். 12ஆகையால், மரணித்து அழியும் உங்கள் உடலில், பாவம் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டாம்; அவ்வாறு அனுமதித்தால், அது உங்களைத் தன் தீய ஆசைகளுக்கு கீழ்ப்படியச் செய்யும். 13உங்கள் உடலின் அங்கங்களை அநீதியின் கருவிகளாக தொடர்ந்து பாவத்துக்கு ஒப்புக்கொடுக்காமல், மரணித்தோரிலிருந்து வாழ்வு பெற்றவர்களாய் உங்களையே இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். உங்கள் அங்கங்களையும் நீதியின் கருவிகளாக இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14ஏனென்றால், நீங்கள் நீதிச்சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்படாமல் கிருபைக்கு உட்பட்டிருப்பதால் பாவம் உங்களை ஆளுகை செய்யாது.
நீதிக்கு அடிமைகள்
15அவ்வாறானால் என்ன? நீதிச்சட்டத்துக்கு உட்பட்டிராது கிருபைக்கு உட்பட்டிருக்கின்றபடியால் நாம் பாவம் செய்யலாம் என்று சொல்லலாமா? இல்லவே இல்லை. 16நீங்கள் உங்களை கீழ்ப்படியும் அடிமைகளாக யாரிடத்தில் ஒப்புக்கொடுக்கின்றீர்களோ, அவர்களுக்கே நீங்கள் அடிமைகளாய் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதுபோல நீங்களும் ஒன்றில் மரணத்திற்கு வழிநடத்துகின்ற பாவத்திற்கு அடிமைகளாக இருக்கின்றீர்கள் அல்லது நீதிக்கு வழிநடத்துகின்ற கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருக்கின்றீர்கள். 17இறைவனுக்கு நன்றி, ஏனென்றால் ஒரு காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாய் இருந்தபோதிலும், நீங்கள் உங்களை ஒப்புக்கொடுத்திருந்த போதனைக்கு உங்கள் முழு இருதயத்தோடும் கீழ்ப்படிந்தீர்கள். 18இப்போது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளாக்கப்பட்டீர்கள்.
19உங்களுடைய பலவீனமான இயல்பின் காரணமாக நான் மனித வழக்கத்தின்படி உங்களுடன் பேசுகின்றேன். முன்பு ஒரு காலத்தில் நீங்கள் உங்கள் அங்கங்களை அசுத்தத்துக்கும், நெறிமீறுதல்களுக்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தபோது, அது இன்னும் அதிக நெறிமீறுதல்களை உருவாக்கியது. அதேபோன்று இப்போது உங்கள் அங்கங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள், அப்போது அது பரிசுத்தத்தை உருவாக்கும். 20நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்த காலத்தில் நீதிக்கு அடிமைப்படாத, சுதந்திரம் உடையவர்களாக இருந்தீர்கள். 21நீங்கள் அப்போது செய்த காரியங்களுக்காக, இப்போது வெட்கப்படுகின்றீர்களே! அவற்றால் என்ன பலன் அடைந்தீர்கள்? அவற்றின் முடிவு மரணமே. 22ஆனால், இப்பொழுதோ நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் பெறும் பலன் உங்களை பரிசுத்தமாகுதலுக்கு வழிநடத்தும். அதன் இறுதி விளைவோ நித்திய வாழ்வு. 23பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவன் தரும் கிருபை வரமோ, நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் நித்திய வாழ்வு.

Currently Selected:

ரோமர் 6: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in