Bible App logo
Search Icon

ரோமர் 5

5
சமாதானமும் நம்பிக்கையும்
1ஆகவே, நாம் விசுவாசத்தின் மூலமாக நீதிமானாக்கப்பட்டிருக்கின்றபடியால், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாய் எமக்கு இறைவனுடன் சமாதானம் இருக்கின்றது. 2அவர் மூலமாக நாம் கிருபைக்குள் விசுவாசத்தினால் உட்சென்று, அந்தக் கிருபையிலே நிலைநின்று கொண்டிருந்து, இறைவனுடைய மகிமையைக் குறித்த எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். 3அதுமட்டுமன்றி, துன்பங்கள் சகிப்புத் தன்மையையும், 4சகிப்புத் தன்மை பரீட்சிக்கப்பட்ட நற்குணத்தையும், பரீட்சிக்கப்பட்ட நற்குணம் எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிந்து, நம்முடைய பாடுகளிலும் மகிழ்ச்சியடைகிறோம். 5நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பரிசுத்த ஆவியானவர் மூலமாய் இறைவனுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கின்றபடியால், இந்த எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காது.
6இதோ, நாம் பலமற்றவர்களாய் இருக்கையிலே, குறித்த வேளையில் அநியாயக்காரர்களுக்காக கிறிஸ்து மரணித்தார். 7நீதிமானுக்காக ஒருவன் உயிரிழப்பது மிகவும் அரிது, ஒருவேளை நல்லவன் ஒருவனுக்காக யாராவது உயிரிழக்கத் துணியலாம். 8ஆனால், நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையில், கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுத்ததன் மூலமாக இறைவன் நம்மீது வைத்த தமது அன்பை தெரியப்படுத்துகிறார்.
9இப்பொழுதோ நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கின்றபடியால், அவர் மூலமாய் இறைவனுடைய கோபத்திலிருந்து இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! 10நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே, அவருடைய மகனின் மரணத்தின் மூலமாய் நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமே! அவ்வாறெனின், இப்போது இறைவனோடு நாம் ஒப்புரவாக்கப்பட்டிருக்கையில், அவருடைய மகனின் வாழ்வின் மூலமாக நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயம் அல்லவா! 11அதுமட்டுமன்றி, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாய், இறைவனில் மகிழ்ச்சி அடைகிறோம், அவர் மூலமாய் இப்போது நாம் ஒப்புரவாகுதலைப் பெற்றுள்ளோம்.
ஆதாம் மூலமாக மரணம், கிறிஸ்துவின் மூலமாக வாழ்வு
12ஆகவே ஒரு மனிதன் மூலமாக உலகத்திற்குள் பாவம் நுழைந்து, பாவத்தின் வழியாக மரணமும் வந்தது போல, எல்லோரும் பாவம் செய்ததால் எல்லா மனிதருக்கும் மரணமும் பரவியது.
13நீதிச்சட்டம் கொடுக்கப்பட முன்னதாகவே பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது, பாவம் பாவமாகக் கணக்கிடப்படவில்லை. 14ஆனாலும் ஆதாம் முதற்கொண்டு மோசே வரை, ஆதாமின் கட்டளை மீறுதலைப் போன்ற பாவத்தைச் செய்யாதவர்கள் மீதும் கூட மரணம் ஆட்சி செய்தது.
அந்த ஆதாம், வரப்போகின்றவருக்கு மாதிரியானவன். 15ஆனால் கிருபை வரமானது, ஆதாமின் மீறுதலைப் போன்றதல்ல. எவ்வாறெனில், ஒரே மனிதனுடைய மீறுதலினால் அநேகா் மரித்தது போல, ஒரே மனிதரான இயேசு கிறிஸ்துவின் கிருபையில் இறைவனுடைய கிருபையும் அன்பளிப்பும் அநேகர் மேல் பெருகி வழிகின்றன. 16மேலும் இறைவனுடய இந்த அன்பளிப்பு ஒரு மனிதனுடைய பாவத்தைப் போன்றதல்ல. ஒருபுறம் நியாயத்தீா்ப்பானது தண்டனைத்தீர்ப்பை ஏற்படுத்திய ஒரேயொரு மீறுதலினுாடாக வந்தது. மறுபுறம் கிருபையான அன்பளிப்பானது நீதிமானாக்கப்படுதலை ஏற்படுத்திய அநேக மீறுதல்களினுாடாக வந்தது. 17ஒரே மனிதனின் மீறுதலினால், அந்த மனிதனின் மூலமாக மரணம் ஆளுகை செய்ததல்லவா? அவ்வாறானால், பெருகி வழிகின்ற கிருபையையும் அன்பளிப்பான நீதியையும் பெற்றுக்கொண்டவர்கள், ஒரே மனிதனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக அதைவிட அதிகமாக வாழ்க்கையில் ஆட்சி செய்வார்கள் அல்லவா!
18ஆகையால் விளைவு, ஒரு மீறுதலினால் அனைத்து மனிதருக்கும் தண்டனைத்தீர்ப்பு உண்டானது போல, இயேசுவின்#5:18 இயேசுவின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது ஒரேயொரு நீதியான செயலால் அனைத்து மனிதருக்கும் வாழ்வளிக்கும் நீதிமானாக்கப்படுதலும் உண்டாயிற்று. 19ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலின் மூலமாக, அநேகர் நீதிமானாக்கப்படுவார்கள்.
20மீறுதல் பெருகும்படி நீதிச்சட்டம் வந்தது, ஆனால் பாவம் பெருகிய இடத்தில் கிருபை இன்னும் அதிகமாகப் பெருக்கெடுத்தது. 21இவ்வாறு, பாவமானது மரணத்தில் ஆளுகை செய்தது போல, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய வாழ்வைக் கொண்டுவரும்படி, நீதியின் மூலமாக கிருபையும் ஆளுகை செய்யும்.

Currently Selected:

ரோமர் 5: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in