ரோமர் 3
3
இறைவனின் உண்மைத்தன்மை
1அவ்வாறானால், யூதனாய் இருப்பதில் உள்ள நன்மை என்ன? விருத்தசேதனத்தின் பயன் என்ன? 2எல்லாவிதத்திலும் பல நன்மைகள் உள்ளன. அந்த வகையில் முதலாவதாக இறைவெளிப்பாடுகள் யூதர்களிடமே நம்பி ஒப்படைக்கப்பட்டன.
3அவ்வாறு இருந்தும் சிலர் அந்த உண்மைக்கு விசுவாசம் அற்றவர்களாய் நடந்தார்கள். அதனால் என்ன? அவர்களில் சிலரது விசுவாசமின்மையால், இறைவனின் நம்பகத்தன்மை நிறுத்தப்பட்டு விடுமா? 4ஒருபோதும் அவ்வாறு ஆகி விடாது! மனிதர்கள் அனைவரும் பொய்யராகிப் போனாலும், இறைவனே உண்மையுள்ளவர் என்பது தெளிவாகட்டும். ஏனெனில் எழுதியிருக்கின்றபடி,
“நீர் பேசும்போது நீர் நியாயப்படுத்தப்பட்டு,
நியாயம் விசாரிக்கும்போது வழக்கில் நீர் வெற்றி அடைவீராக!”#3:4 சங். 51:4
5ஆனால் இதை வைத்துக்கொண்டு, நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை நன்கு வெளிக்கொண்டுவர பயன்படுகின்றது என்று யாராவது கூறுவார்களானால், நாம் என்ன சொல்வோம்? மனித வழக்கத்தின்படி இதைக் கூறுவதானால், இறைவன் நம்மீது கோபத்தை வெளிக்காட்டுகின்றபோது, அவர் அநீதியாக நடந்து கொள்கின்றாரா என்று கேள்வி எழுப்பலாமா? 6ஒருபோதும் அவ்வாறு சொல்லவே முடியாது! அவ்வாறு சொல்வது சரியாக இருந்தால், இறைவனால் எவ்வாறு இந்த உலகத்தை நியாயம் தீர்க்க முடியும்? 7“என்னுடைய பொய்யானது இறைவனுடைய சத்தியத்தை உயர்த்தி, அவ்வாறாக அவருடைய மகிமையை மேலோங்கச் செய்கின்றது என்றால், நான் ஒரு பாவி என்று ஏன் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்றும் நாம் கேட்கலாமே? 8அவ்வாறாயின் இறுதியில் நன்மை வரும் வகையில் நாம் தீமை செய்யலாமே? நாம் அவ்வாறு சொல்வதாகத்தான் சிலர் அவதூறாகத் தீர்மானிக்கிறார்கள்; அவர்கள்மீது தண்டனைத்தீர்ப்பு வருவது நீதியானதே.
நீதிமான் ஒருவனுமில்லை
9அப்படியானால், யூதர்களாகிய நாங்கள் மற்றவர்களைவிட சாதகமான நிலையில் உள்ளோம் என்ற முடிவுக்கு வரலாமா? முடியவே முடியாது. யூதர்களும் கிரேக்கர்களும்#3:9 கிரேக்கர்களும் – யூதரல்லாத அனைவரையும் குறிக்கின்றது பாவத்தின் கீழே இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கெனவே சுமத்திவிட்டோமே. 10வேதவசனம் இதை இப்படிக் கூறுகிறது:
“நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனேனுமில்லை,
11புரிந்துணர்வுள்ளவன் ஒருவனுமில்லை,
இறைவனைத் தேடுகின்றவன் ஒருவனுமில்லை.
12எல்லோரும் வழிவிலகி,
ஒருமித்து தகுதியற்றவர்கள் ஆனார்கள்.
நன்மை செய்கின்றவன் ஒருவனுமில்லை,
ஒருவனேனுமில்லை.”#3:12 சங். 14:1-3; 53:1-3; பிர. 7:20
13அவர்களுடைய தொண்டை, திறக்கப்பட்ட பிரேதக்குழி;
“அவர்களுடைய நாவுகள் வஞ்சனை பேசுகின்றன.
அவர்களது உதடுகளின் கீழ், விரியன் பாம்பின் விஷம் இருக்கின்றது.”#3:13 சங். 140:3
14“அவர்களுடைய வாய் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றது.”#3:14 சங். 10:7
15“அவர்களுடைய பாதங்கள் இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகின்றன.
16அழிவும் அவலமும் அவர்கள் வழிகளில் இருக்கின்றன.
17அவர்கள் சமாதானத்தின் வழியை அறிய மாட்டார்கள்.”#3:17 ஏசா. 59:7,8
18“அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”#3:18 சங். 36:1
19எவரும் எதிர்த்து வாதாடாமல் அனைத்து வாய்களும் மூடப்படவும், உலகிலுள்ள அனைவரும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்கும் வகையிலும், நீதிச்சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம் நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே என்று அறிந்திருக்கின்றோம். 20ஏனெனில், நீதிச்சட்டத்தின்படி செய்கின்ற முயற்சிகளால் யாருமே இறைவனுடைய பார்வையில் நீதிமானாக்கப்படுவதில்லை, மாறாக பாவத்தைப் பற்றிய உணர்வே நீதிச்சட்டத்தின் மூலமாக வருகின்றது.
விசுவாசத்தின் மூலமாக வரும் நீதி
21இப்பொழுதோ நீதிச்சட்டத்துக்கு அப்பால் இறைவனின் நீதி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது, ஆனாலும் அதற்கு நீதிச்சட்டமும், இறைவாக்குகளும் சான்று பகர்கின்றன. 22விசுவாசிக்கின்ற எவருக்கும் இயேசு கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாய் கிடைக்கின்ற இறைவனின் நீதி இதுவாகும், இதில் எவரென்ற#3:22 எவரென்ற – யூதரோ யூதரல்லாதவர் என்றோ என்று பொருள் வேறுபாடு இல்லை; 23ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாதிருக்கிறார்கள், 24இறைவனுடைய இலவச அன்பளிப்பான கிருபையினால் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் ஊடாக அவர்கள் நீதிமானாக்கப்படுகின்றாா்கள். 25இறைவன், தம்முடைய நீதி நிரூபிக்கப்படும்படி, கிறிஸ்துவின் இரத்தத்தில்#3:25 கிறிஸ்துவின் இரத்தத்தில் – கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் என்று பொருள் வைக்கப்படும் விசுவாசத்தினூடாக, பாவநிவாரணப் பலியாக கிறிஸ்துவை முன்வைத்தார். மக்கள் முற்காலத்தில் செய்த பாவங்களை அவர் தமது பொறுமையின் காரணமாக தண்டிக்காமல் விட்டாலும், தாம் நீதி உள்ளவர் என்பதை இவ்வாறு வெளிப்படையாகக் காண்பித்துள்ளார். 26இக்காலத்தில், தமது நீதியான இயல்புக்குச் சான்றாகவும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்களை நீதிமான்களாக்கும் அதேவேளையில், தாமும் நீதியானவராக இருக்குமாறும் இவ்வாறு செய்தார்.
27எனவே எங்கள் தற்பெருமை எங்கே? அதற்கு இடமே இல்லாது போய்விட்டது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்களாக்கப்பட்டோம்? மனித முயற்சியின் சட்டத்தினாலா? இல்லவே இல்லை! விசுவாச சட்டத்தின் அடிப்படையிலேயே நீதிமான்களாக்கப்பட்டோம். 28ஆகவே விசுவாசத்தினாலேயே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான்; நீதிச்சட்டத்தின்படி செய்யப்படுகின்ற மனித முயற்சிகளுக்கு அது அப்பாற்பட்டது என்ற தீர்க்கமான முடிவுக்கு வருகின்றோம். 29ஒருவேளை இறைவன் யூதர்களுக்கு மட்டுமே இறைவனாக இருக்கின்றாரா? யூதர் அல்லாதவர்களுக்கும் அவர் இறைவன் இல்லையோ? உண்மையில், யூதரல்லாதவர்களுக்கும் அவர் இறைவனாய் இருக்கின்றார். 30ஏனென்றால் விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் அற்றவர்களை அதே விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமானாக்குகின்ற இறைவன் ஒருவரே. 31அவ்வாறானால், விசுவாசத்தின் மூலமாக நீதிச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி விடுகின்றோமா? ஒருபோதும் இல்லை! மாறாக, நீதிச்சட்டத்தை உறுதிப்படுத்துகிறோம்.
Currently Selected:
ரோமர் 3: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
