2
மதகுருக்களுக்கு எச்சரிக்கை
1“மதகுருக்களே, இப்போதும் இந்தக் கட்டளை உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 2நீங்கள் செவிசாய்க்காமலும், என் பெயரை மகிமைப்படுத்தும்படி உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும் போனால், நான் உங்கள்மீது ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். ஆம், நீங்கள் என்னை கௌரவப்படுத்துவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவற்றைச் சபித்து விட்டேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
3“உங்கள் பொருட்டு உங்கள் வழித்தோன்றல்களை நான் கடிந்துகொள்வேன்; நீங்கள் பண்டிகைக் காலங்களில் பலியிட்ட சாணத்தை உங்கள் முகங்களின்மீது வீசி எறிவேன். நீங்களும் அதனுடன் வீசப்படக் கொண்டுபோகப்படுவீர்கள். 4லேவியின் சந்ததியுடன் நான் செய்துகொண்ட உடன்படிக்கை மேலும் தொடரும்படி, இந்தக் கட்டளையை நான் அனுப்பினேன் என்பதை அப்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 5“நான் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கும் உடன்படிக்கை; அவற்றை நான் அவனுக்குக் கொடுத்தேன்; இதனால் நான் அவனிடம் பயபக்தியை எதிர்பார்த்தேன். அவனும் என்னிடம் பயபக்தியாயிருந்து என் பெயரைக் குறித்த பயம் உடையவனாயிருந்தான். 6அவன் வாயில் உண்மையான அறிவுறுத்தல் இருந்தது. அவனுடைய உதடுகளில் பொய்யானதொன்றும் காணப்படவில்லை. அவன் என்னோடு சமாதானத்துடனும் நீதியுடனும் நடந்தான். அவன் அநேகரைப் பாவத்திலிருந்து திருப்பினான்.
7“மதகுருவின் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய வாயிலிருந்து மக்கள் அறிவுறுத்தலைத் தேட வேண்டும். ஏனெனில் அவனே சேனைகளின் கர்த்தரின் தூதுவனாயிருக்கிறான். 8ஆனால் நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை உங்கள் போதனைகளால் இடறிவிழச் செய்தீர்கள்; நான் லேவியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள்” என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 9“நீங்கள் என்னுடைய வழிகளைப் பின்பற்றாது, என் சட்டத்தின் விடயங்களில் பாரபட்சம் காட்டியதால், நான் உங்களை அனைத்து மக்களுக்கு முன்பாகவும் அவமானப்படுத்தி, இழிவுக்குள்ளாகும்படி செய்திருக்கிறேன்.”
உண்மையற்ற யூதா
10நம் எல்லோருக்கும் ஒரே தந்தை அல்லவா இருக்கின்றார்? நம் எல்லோரையும் ஒரே இறைவன்தானே படைத்தார். அவ்வாறிருக்க நாம் ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்களாயிருந்து, நம் முற்பிதாக்களுடன் இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஏன் தூய்மைக்கேடாக்க வேண்டும்?
11யூதா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. இஸ்ரயேலிலும், எருசலேமிலும் அருவருக்கத்தக்க செயல் செய்யப்பட்டிருக்கிறது: அந்நிய தெய்வங்களை வழிபடும் பெண்களைத் திருமணம் செய்ததனால், கர்த்தர் விரும்பும் பரிசுத்த ஆலயத்தை யூதா கறைப்படுத்தி இருக்கின்றது. 12இதைச் செய்கின்றவன் யாராயிருந்தாலும் அவனை யாக்கோபின் கூடாரங்களில் வாழாதபடி கர்த்தர் முழுவதும் அகற்றிவிடட்டும்; அவன் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாய் இருந்தாலும், அவனை அகற்றிவிடட்டும்.
13நீங்கள் இன்னொன்றைச் செய்கின்றீர்கள்: கர்த்தரின் பலிபீடத்தைக் கண்ணீரினால் நிரப்புகிறீர்கள். கர்த்தர் உங்கள் காணிக்கைகளைக் கண்ணோக்கிப் பாராமல் இருப்பதனாலும், அவற்றை உங்கள் கைகளிலிருந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதனாலும் அழுது புலம்புகிறீர்கள். 14நீங்களோ, “இது ஏன்?” என்று கேட்கின்றீர்கள். ஏனென்றால் உனது வாலிப காலத்து மனைவிக்கும் உனக்கும் இடையே கர்த்தர் சாட்சியாய் இருந்தார். அவள் உனக்குத் துணைவியாயிருந்தும், திருமண உடன்படிக்கையின்படி அவள் உனக்கு மனைவியாயிருந்தும் நீ அவளுக்குத் துரோகம் செய்திருக்கிறாய்.
15உங்கள் இருவரையும் கர்த்தர் ஒருவராய் இணைக்கவில்லையா? நீங்கள் உடலிலும் ஆவியிலும் அவருடையவர்களே. ஏன் ஒருவராய் இணைத்தார்? இறைபக்தியுள்ள சந்ததியை பெறுவதற்காகவே இவ்வாறு செய்தார். எனவே நீங்கள் உங்கள் ஆவியிலே உங்களைக் காத்துக்கொண்டு, உங்கள் வாலிப வயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள்.
16ஏனெனில் தனது மனைவியை விவாகரத்து செய்பவனை நான் வெறுக்கிறேன் என இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார். அப்படிப்பட்ட மனிதன் வன்முறையினால் தன் ஆடையை மறைத்துக்கொள்கிறான் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
எனவே நீங்கள் உங்களை ஆவியில் காத்துக்கொண்டு, உங்கள் மனைவிக்கு#2:16 உங்கள் மனைவிக்கு – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருங்கள்.
நியாயத்தீர்ப்பு நாள்
17நீங்கள் உங்கள் வார்த்தையினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்.
“நாங்கள் எவ்வாறு அவரை வருத்தப்படுத்தினோம்?” எனக் கேட்கின்றீர்கள்.
தீமையானவற்றைச் செய்கின்ற எல்லோரும் கர்த்தரின் பார்வையில் நல்லவர்கள் என்றும், அவர்களிலே அவர் மகிழ்ச்சிகொள்கிறார் என்றும் சொல்லும்போதும், “நீதியை வழங்கும் இறைவன் எங்கே?” என்று கேட்கும்போதுமே அவ்வாறு செய்கின்றீர்கள்.