3
1“பாருங்கள், நான் என் தூதுவனை அனுப்புவேன், அவன் எனக்கு முன்பாக வழியை ஆயத்தம் செய்வான்; நீங்கள் தேடுகிற ஆண்டவர் தம்முடைய ஆலயத்துக்குத் திடீரென வருவார்; நீங்கள் விரும்புகின்ற உடன்படிக்கையின், தூதுவனானவர் வருவார்” என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
2ஆனால் அவர் வரும் நாளைச் சகித்துக்கொள்ள யாரால் முடியும்? அவர் தோன்றுகையில் அவர் முன்பாக யாரால் நிற்க முடியும்? ஏனெனில் அவர் புடமிடுபவனின் நெருப்பைப் போலவும், சலவை செய்பவனின் சவர்க்காரத்தைப் போலவும் இருப்பார். 3அவர் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிப்பவனைப் போல் அமர்ந்து, லேவியின் மக்களைச் சுத்திகரிப்பார்; அவர் தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் அவர்களைச் சுத்திகரிப்பார். அப்போது அவர்கள் கர்த்தருக்குத் தமது காணிக்கையை நீதியுடன் கொண்டுவருவார்கள். 4எனவே சென்ற நாட்களிலும் முன்னைய வருடங்களிலும் நடந்தது போல, யூதா மக்களின் காணிக்கைகளும் எருசலேம் மக்களின் காணிக்கைகளும் கர்த்தருக்கு பிரியமானவையாக இருக்கும்.
5“அப்போது நியாயம் தீர்ப்பதற்காக நான் உங்கள் மத்தியில் வருவேன். சூனியக்காரருக்கும், தகாத உறவில் ஈடுபடுவோருக்கும், பொய்ச்சத்தியம் செய்வோருக்கும், வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காது ஏமாற்றுகின்றவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களையும் தந்தையற்றவர்களையும் ஒடுக்குகின்றவர்களுக்கும், அந்நியரை நீதியாக நடத்தத் தவறுகின்றவர்களுக்கும், எனக்குப் பயப்படாதவர்களுக்கும் எதிராக நான் விரைந்து வந்து சாட்சி சொல்வேன்” என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
இறைவனிடமிருந்து திருடுதல்
6“கர்த்தராகிய நான் மாறாதவர். எனவேதான் யாக்கோபின் சந்ததியாகிய நீங்கள் அழிக்கப்படாதிருக்கிறீர்கள். 7உங்கள் முற்பிதாக்களின் காலத்திலிருந்து நீங்கள் என் விதிமுறைகளைவிட்டு விலகி, அவற்றைக் கைக்கொள்ளாமல் இருந்தீர்கள். இப்போதோ என்னிடம் திரும்புங்கள், நானும் உங்களிடம் திரும்புவேன்” என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
“நீங்கள், ‘நாம் எவ்விதம்#3:7 எவ்விதம் அல்லது எந்தக் காரியத்தில் திரும்ப வேண்டும்?’ எனக் கேட்கின்றீர்கள்.
8“ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையடிப்பானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள்.
“ஆனால் நீங்கள், ‘உம்மிடமிருந்து நாங்கள் எப்படிக் கொள்ளையடித்தோம்?’ என்று கேட்கின்றீர்கள்.
“பத்தில் ஒரு பங்கிலும்#3:8 பத்தில் ஒரு பங்கிலும் – மக்களின் விளைச்சல் மற்றும் கால்நடைகளில் பத்தில் ஒரு பங்கு. லேவி. 27:30-33; எண். 18:21-24; உபா. 14:22-29, காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள். 9நீங்கள் சாபத்துக்கு உட்பட்டவர்கள்; என்னிடமிருந்து கொள்ளையடிப்பதால் உங்கள் முழு இனமும் சபிக்கப்பட்டதாகும். 10என் ஆலயத்தில் உணவு இருக்கும்படியாக, உங்கள் பத்தில் ஒரு பங்கு முழுவதையும் களஞ்சியத்துக்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மீது பொழிய மாட்டேனோ என்று பாருங்கள். 11உங்கள் பயிர்களைப் பூச்சி புழுக்கள் தின்றுவிடாமலும், உங்கள் தோட்டங்களிலுள்ள திராட்சைக்கொடிகளிலிருந்து காய்கள் உதிராமலும் காத்துக்கொள்வேன் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 12அப்போது அனைத்து இனத்தவரும் உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என அழைப்பார்கள். ஏனெனில் உங்கள் நாடு ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்கும்” என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
இஸ்ரயேலர் கர்த்தருக்கு எதிராகப் பேசுதல்
13“அத்துடன் நீங்கள் எனக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைச் சொல்லியிருக்கின்றீர்கள்” என கர்த்தர் சொல்கின்றார்.
“ஆயினும் நீங்கள், ‘நாங்கள் உமக்கு எதிராக என்ன சொல்லியிருக்கின்றோம்?’ எனக் கேட்கின்றீர்கள்.
14“நீங்களோ, ‘இறைவனை வழிபடுவது வீணானது. அவருடைய கட்டளைகளை நிறைவேற்றி, சேனைகளின் கர்த்தரின் முன்பாக துக்கம் அனுஷ்டிக்கிறவர்களாய் திரிந்து என்ன பயன் அடைந்தோம்?’ என்று சொல்கின்றீர்கள். 15அத்துடன் நீங்கள், ‘அகந்தையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிச்சயமாக தீமை செய்கின்றவர்கள் செழிப்பாக வாழ்கின்றார்கள்; அவர்கள் இறைவனைச் சோதித்தாலும் தண்டனை பெறாமல் தப்பித்துக் கொள்கிறார்கள்’ என்று சொல்கின்றீர்கள்.”
உண்மையுள்ள ஆதாரங்கள்
16அப்போது கர்த்தருக்குப் பயந்து நடப்பவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அதைக் கர்த்தர் செவிசாய்த்துக் கேட்டார்; கர்த்தருக்குப் பயந்தவர்களையும், அவரது பெயரைக் கௌரவப்படுத்தியவர்களையும் குறித்து அவர் முன்பாக ஒரு ஞாபகப் புத்தகச் சுருள் எழுதப்பட்டது.
17“எனக்கு அருமையான சொத்தை நான் சேர்க்கும் நாளில், அவர்கள் எனக்கொரு தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். ஒருவன் தனக்குப் பணி செய்யும்#3:17 பணி செய்யும் அல்லது கீழ்ப்படியும் தன் சொந்த மகனை மனமிரங்கி காப்பாற்றுவது போல, நானும் அவர்களைக் காப்பாற்றுவேன். 18அப்போது நீங்கள் நீதியானவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும், இறைவனை வழிபடுகின்றவர்களுக்கும் வழிபடாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் மீண்டும் காண்பீர்கள்.