யாத்திராகமம் 9
9
கால்நடைகள்மீது ஐந்தாம் வாதை
1அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போய் எபிரேயரின் இறைவனாகிய கர்த்தர் சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு போக விடு. 2நீ அவர்களைப் போகவிட மறுத்து, தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், 3வயல்வெளிகளிலுள்ள உங்கள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், மந்தைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகிய அனைத்து கால்நடைகள்மீதும் கொடிய வாதையை கர்த்தருடைய கரம் கொண்டுவரும். 4இஸ்ரயேலருடைய கால்நடைகளுக்கும், எகிப்தியருடைய கால்நடைகளுக்கும் இடையில் கர்த்தர் வேறுபாடு உண்டாக்குவார். அதனால் இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றேனும் இறக்காது’ என்று அவனுக்குச் சொல்” என்றார்.
5கர்த்தர் ஒரு காலத்தைக் குறிப்பிட்டு, “கர்த்தர் நாளைக்கே இதை இந்த நாட்டில் செய்வார்” என்று சொன்னார். 6மறுநாள் கர்த்தர் அதை செய்தார். எகிப்தியரின் கால்நடைகள் எல்லாம் இறந்தன; ஆனால் இஸ்ரயேலருக்குச் சொந்தமான ஒரு மிருகமாயினும் இறக்கவில்லை. 7பார்வோன் அதுபற்றி விசாரிக்க ஆளனுப்பி, இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றேனும் இறந்திருக்கவில்லை என்பதை அறிந்தான். ஆயினும் பார்வோனின் இருதயம் கடினமாகி, அவன் இஸ்ரயேல் மக்களைப் போக விடவில்லை.
ஆறாம் வாதையாகிய கொப்புளங்கள்
8அப்போது கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “நீங்கள் சூளையிலிருந்து சாம்பலை கைநிறைய அள்ளிக்கொள்ளுங்கள். மோசே அதைப் பார்வோனுக்கு முன்பாக ஆகாயத்தில் வீசட்டும். 9அது எகிப்து நாடு முழுவதிலும் தூசியாகி, நாடெங்குமுள்ள மனிதர்கள்மீதும், மிருகங்கள்மீதும் எரிவுண்டாக்கும் கொப்புளங்களை உண்டாக்கும்” என்றார்.
10அவ்வாறே அவர்கள் சூளையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டு போய் பார்வோனுக்கு முன் நின்றார்கள். மோசே அதை ஆகாயத்தை நோக்கி வீசினான். உடனே மனிதர்மீதும் மிருகங்கள்மீதும் எரிவுண்டாக்கும் கொப்புளங்கள் உண்டாயின. 11அவை மந்திரவாதிகள்மீதும், எகிப்தியர் எல்லோர்மீதும் உண்டானதால், மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்க முடியவில்லை. 12கர்த்தர் பார்வோனின் இருதயத்தை மேலும் கடினப்படுத்தினார். கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை.
ஏழாம் வாதையாகிய ஆலங்கட்டி மழை
13அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது, “நீ அதிகாலையில் எழுந்து பார்வோனின் எதிரில் போய் அவனிடம், எபிரேயரின் இறைவனாகிய கர்த்தர் சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு போக விடு. 14இல்லையெனில் இம்முறை உனக்கும், உன் அதிகாரிகளுக்கும், உன் நாட்டு மக்களுக்கும் எதிராக எனது அனைத்து வாதைகளையும் அனுப்புவேன். இதனால் பூமி எங்கும் எனக்கு நிகரானவர் எவருமே இல்லை என்பதை நீ அறிந்துகொள்வாய். 15நான் என் கரத்தை நீட்டி, பூமியிலிருந்து உங்களை முற்றிலும் அழித்துவிடும் கொள்ளைநோய் ஒன்றினால் உன்னையும் உன் மக்களையும் அடித்திருக்கலாம்; 16ஆனாலும், உன்னை நான் இதற்காகவே உயர்த்தினேன்; என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, என்னுடைய பெயர் உலகெங்கும் பறைசாற்றப்படவே உன்னை உயர்த்தினேன். 17நீயோ இன்னும் என்னுடைய மக்களுக்கு விரோதமாயிருந்து அவர்களைப் போகவிடாமல் இருக்கின்றாய். 18ஆதலால் நாளை இதே நேரத்தில், எகிப்து நாடு உண்டானது முதல் இன்றுவரை அங்கே ஒருபோதும் பெய்திராத கடுமையான ஆலங்கட்டி மழையை அனுப்புவேன். 19ஆகையால், இப்பொழுதே உன் கால்நடைகளையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்றைய யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே வராமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதன்மீதும், மிருகம்மீதும் ஆலங்கட்டி மழை பெய்து, அவர்கள் இறந்து விடுவார்கள்’ என்று சொல்” என்றார்.
20கர்த்தருடைய வார்த்தைக்குப் பயந்த பார்வோனின் அலுவலர்கள் தங்கள் அடிமைகளையும், கால்நடைகளையும் வீடுகளுக்குள் கொண்டுவர விரைந்தார்கள். 21ஆனால் கர்த்தருடைய வார்த்தையை அலட்சியப்படுத்தியவர்களோ, தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வெளியிலே விட்டுவிட்டார்கள்.
22அப்போது கர்த்தர் மோசேயிடம், “எகிப்து நாடெங்கும் ஆலங்கட்டி மழை பெய்யும்படி உன் கையை ஆகாயத்துக்கு நேராக நீட்டு. அப்போது மனிதர்மீதும், மிருகங்கள்மீதும், எகிப்தின் வயல்வெளியின் பயிர்கள் எல்லாவற்றின்மீதும் ஆலங்கட்டி மழை பெய்யும்” என்றார். 23மோசே அவ்விதமே ஆகாயத்தை நோக்கித் தன் கோலை நீட்டியபோது, கர்த்தர் இடி முழக்கத்தையும், ஆலங்கட்டி மழையையும் அனுப்பினார். நெருப்பு தரை வரையும் மின்னிப் பாய்ந்தது. இவ்வாறு கர்த்தர் ஆலங்கட்டிகளை எகிப்து நாட்டின் மேல் பொழிந்தார். 24ஆலங்கட்டி மழையுடன், நெருப்பு முன்னும் பின்னுமாக மின்னியது. எகிப்து ஒரு இனமாக உருவான காலம்முதல் இதைப் போன்ற கடும்புயல் ஏற்பட்டதில்லை. 25எகிப்து நாடு எங்கும் வயல்வெளியிலுள்ள மனிதர்கள்மீதும் மிருகங்கள்மீதும் ஆலங்கட்டி மழை பெய்தது. வயல்வெளியின் பயிர்கள் அழிந்து, அனைத்து மரங்களும் முறிந்தன. 26இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசத்தில் மாத்திரம் ஆலங்கட்டி மழை பெய்யவில்லை.
27அப்போது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, அவர்களிடம், “இம்முறை நான் பாவம் செய்தேன். கர்த்தர் நீதியுள்ளவர், நானும் என் மக்களும் தவறு செய்தோம். 28கர்த்தரிடம் மன்றாடுங்கள். இந்த இடி முழக்கமும், ஆலங்கட்டி மழையும் எங்களுக்குப் போதும். நான் உங்களைப் போகவிடுவேன்; இனியும் நீங்கள் இங்கிருக்க வேண்டியதில்லை” என்றான்.
29அதற்கு மோசே, “நான் பட்டணத்தைவிட்டுப்#9:29 பட்டணத்தைவிட்டு – ராமசேஸ் பட்டணத்தைவிட்டு போனவுடன் என் கைகளை உயர்த்தி, கர்த்தரிடம் மன்றாடுவேன். அப்போது இடிமுழக்கம் ஓய்ந்து ஆலங்கட்டி மழையும் நின்று விடும். பூமி கர்த்தருடையது என்று நீர் அறிந்துகொள்வீர். 30ஆனால் நீரும் உமது அதிகாரிகளும் இறைவனாகிய கர்த்தருக்கு இன்னும் பயப்படவில்லை என்பதை நான் அறிவேன்” என்றார்.
31சணலும், வாற்கோதுமையும் அழிக்கப்பட்டன. அவ்வேளையில் வாற்கோதுமை கதிர் விட்டிருந்தது. சணல் பூத்திருந்தது. 32முற்றாத பயிர்களான கோதுமையும், கம்பும் அழிக்கப்படவில்லை.
33அப்போது மோசே பார்வோனைவிட்டு பட்டணத்துக்கு வெளியே வந்து, கர்த்தரை நோக்கித் தன் கைகளை உயர்த்தியபோது, இடி முழக்கமும், ஆலங்கட்டி மழையும் ஓய்ந்தது, தரையில் மழையும் பெய்யவில்லை. 34மழையும், ஆலங்கட்டி மழையும், இடி முழக்கமும் நின்றதைப் பார்வோன் கண்டபோது, அவன் திரும்பவும் பாவம் செய்தான். அவனும், அவனுடைய அலுவலர்களும் தங்களுடைய இருதயங்களை கடினப்படுத்தினார்கள். 35பார்வோனின் இருதயம் கடினப்பட்டு, கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் இஸ்ரயேல் மக்களைப் போக விடவில்லை.
Currently Selected:
யாத்திராகமம் 9: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.