YouVersion Logo
Search Icon

மத்தேயு 21:12-20, 22

மத்தேயு 21:12-20 TCV

இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களுமாகிய எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயம் மாற்றுவோரின் மேஜைகளையும், புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். இயேசு அவர்களிடம், “எனது வீடு ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள், அதைக் கள்வரின் குகையாக்குகிறீர்கள்” என்றார். பார்வையற்றோரும் முடவரும் ஆலயத்தில் இயேசுவிடம் வந்தார்கள். அவர் அவர்களை குணமாக்கினார். அவர் செய்த இந்த புதுமையான காரியங்களையும், சிறுபிள்ளைகள் ஆலய முற்றத்திற்குள் நின்று, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று ஆர்ப்பரிப்பதையும், தலைமை ஆசாரியரும் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “இந்தப் பிள்ளைகள் சொல்வது கேட்கிறதா?” என்றார்கள். இயேசு அதற்கு பதிலாக, “ஆம், “ ‘சிறுபிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின் உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்,’ என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவு தங்கினார். மறுநாள் அதிகாலையில், இயேசு பட்டணத்திற்குத் திரும்பிப்போகையில் பசியாயிருந்தார். வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. சீடர்கள் இதைக்கண்டு வியப்படைந்து, “இவ்வளவு சீக்கிரம் இந்த அத்திமரம் எப்படிப் பட்டுப்போயிற்று?” என்று கேட்டார்கள்.

மத்தேயு 21:22 TCV

நீங்கள் விசுவாசித்தால், மன்றாட்டில் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார்.

Free Reading Plans and Devotionals related to மத்தேயு 21:12-20, 22