மாற்கு 9:30-50

மாற்கு 9:30-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். ஏனெனில் மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களா யிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

மாற்கு 9:30-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார். ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள். அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள். இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார். இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார். அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான். இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான். ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார். யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. நரகத்தில், “ ‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’ ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள். “உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.

மாற்கு 9:30-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.

மாற்கு 9:30-50 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர். இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர். ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார். பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார். பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான். இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான். “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள். “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்