மாற்கு எழுதிய சுவிசேஷம் 9:30-50

மாற்கு எழுதிய சுவிசேஷம் 9:30-50 TAERV

பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர். இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர். ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார். பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார். பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான். இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான். “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள். “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.

மாற்கு எழுதிய சுவிசேஷம் 9:30-50 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்