மாற்கு 9:30-50

மாற்கு 9:30-50 TCV

அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார். ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள். அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள். இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார். இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார். அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான். இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான். ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார். யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. நரகத்தில், “ ‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’ ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள். “உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.

மாற்கு 9:30-50 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்