யோசுவா 24:7-15

யோசுவா 24:7-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள். “ ‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள். அடுத்து சிப்போரின் மகனும் மோவாப் தேசத்தின் அரசனுமாகிய பாலாக், இஸ்ரயேலருக்கு விரோதமாகப் போரிட ஆயத்தமானபோது, அவன் உங்களைச் சபிக்கும்படி பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான். ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன். “ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை. இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’ “இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான்.

யோசுவா 24:7-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் யெகோவா நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேகநாட்கள் வாழ்ந்தீர்கள். அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு மறுபுறத்திலே குடியிருந்த எமோரியர்களின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்செய்கிறபோது, அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்களுடைய தேசத்தை சுதந்தரித்துக்கொண்டீர்கள்; அவர்களை உங்களுக்கு முன்பாக அழித்துவிட்டேன். அப்பொழுது சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபியர்களின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்செய்து, உங்களைச் சபிப்பதற்காக, பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான். பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன். பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன். எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது. அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார். ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள். யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.

யோசுவா 24:7-15 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள். ‘அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள். எமோரியரின் தேசத்திற்கு உங்களை அழைத்து வந்தேன். அது யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியாகும். அந்த ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் செய்தனர், ஆனால் நீங்கள் அவர்களைத் தோற்கடிக்குமாறு செய்தேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு கொடுத்தேன். பின்பு அத்தேசத்தை நீங்கள் கைப்பற்றினீர்கள். ‘பிறகு மோவாபின் ராஜாவும், சிப்போரின் மகனுமாகிய பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துப் போரிடத் தயாரானான். பேயோரின் குமாரனாகிய பிலேயாமுக்கு ராஜா சொல்லினுப்பினான். அவன் பிலேயாமிடம் உங்களைச் சபிக்குமாறு கூறினான். ஆனால் கர்த்தராகிய, நான், பிலேயாம் கூறுவதைக் கேட்க மறுத்தேன். எனவே பிலேயாம் உங்களுக்கு நல்லவை நிகழவேண்டுமெனக் கேட்டான்! அவன் உங்களைப் பலமுறை ஆசீர்வதித்தான். நான் உங்களைக் காப்பாற்றி, தீமைகளினின்று விலக்கினேன். ‘பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன். உங்கள் படை முன்னோக்கிச் சென்றபோது, நான் காட்டுக் குளவிகளை அவர்களுக்கு முன்பாக அனுப்பினேன். காட்டுக் குளவிகள் அந்த ஜனங்களையும் இரண்டு எமோரிய ராஜாக்களையும் பயமுறுத்தி ஓடச் செய்தன. வாளையும், வில்லுகளையும் பயன்படுத்தாமலே தேசத்தைக் கைப்பற்றினீர்கள். ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’” பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள். “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான்.

யோசுவா 24:7-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள். அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன். அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான். பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன். பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன். எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது. அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார். ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.