யோசுவாவின் புத்தகம் 24:7-15

யோசுவாவின் புத்தகம் 24:7-15 TAERV

ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள். ‘அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள். எமோரியரின் தேசத்திற்கு உங்களை அழைத்து வந்தேன். அது யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியாகும். அந்த ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் செய்தனர், ஆனால் நீங்கள் அவர்களைத் தோற்கடிக்குமாறு செய்தேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு கொடுத்தேன். பின்பு அத்தேசத்தை நீங்கள் கைப்பற்றினீர்கள். ‘பிறகு மோவாபின் ராஜாவும், சிப்போரின் மகனுமாகிய பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துப் போரிடத் தயாரானான். பேயோரின் குமாரனாகிய பிலேயாமுக்கு ராஜா சொல்லினுப்பினான். அவன் பிலேயாமிடம் உங்களைச் சபிக்குமாறு கூறினான். ஆனால் கர்த்தராகிய, நான், பிலேயாம் கூறுவதைக் கேட்க மறுத்தேன். எனவே பிலேயாம் உங்களுக்கு நல்லவை நிகழவேண்டுமெனக் கேட்டான்! அவன் உங்களைப் பலமுறை ஆசீர்வதித்தான். நான் உங்களைக் காப்பாற்றி, தீமைகளினின்று விலக்கினேன். ‘பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன். உங்கள் படை முன்னோக்கிச் சென்றபோது, நான் காட்டுக் குளவிகளை அவர்களுக்கு முன்பாக அனுப்பினேன். காட்டுக் குளவிகள் அந்த ஜனங்களையும் இரண்டு எமோரிய ராஜாக்களையும் பயமுறுத்தி ஓடச் செய்தன. வாளையும், வில்லுகளையும் பயன்படுத்தாமலே தேசத்தைக் கைப்பற்றினீர்கள். ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’” பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள். “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான்.