யோசுவா 24:7-15

யோசுவா 24:7-15 TCV

அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள். “ ‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள். அடுத்து சிப்போரின் மகனும் மோவாப் தேசத்தின் அரசனுமாகிய பாலாக், இஸ்ரயேலருக்கு விரோதமாகப் போரிட ஆயத்தமானபோது, அவன் உங்களைச் சபிக்கும்படி பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான். ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன். “ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை. இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’ “இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான்.