யோசுவா 22:21-27

யோசுவா 22:21-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்கு மறுமொழியாக ரூபன், காத், மனாசேயின் அரைப்பங்கு கோத்திரத்தார் அனைவரும், அங்கு வந்த இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுக்கு கூறியதாவது: “வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, அவர் அறிவார். அதை இஸ்ரயேலரும் அறிந்துகொள்ளட்டும்! யெகோவாவுக்கு எதிரான கலகமாய், அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமையாய் இது இருந்தால் இன்று எங்களைத் தப்பவிடவேண்டாம். யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்காகவும், தகன காணிக்கைகளையோ, தானியக் காணிக்கைகளையோ, அல்லது சமாதான காணிக்கைகளையோ பலியிடுவதற்காகவும் நாங்கள் எங்கள் சொந்தப் பலிபீடத்தைக் கட்டியிருந்தால், யெகோவா தாமே எங்களிடம் கணக்குக் கேட்கட்டும். “இல்லை! உங்கள் சந்ததிகள், எங்கள் சந்ததிகளிடம் ஒரு நாளைக்கு, ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ரூபனியரே! காத்தியரே! உங்களுக்கும் எங்களுக்கும் இடையே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார்; யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை’ என்று சொல்வார்கள் என்ற பயத்தினால் இதைச் செய்தோம். இவ்வாறு எங்களுடைய சந்ததிகள் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதை நிறுத்திவிட உங்கள் சந்ததிகள் காரணமாயிருப்பார்கள். “அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல; மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.

யோசுவா 22:21-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக: தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக. ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், யெகோவா அதை விசாரிப்பாராக. நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் என்ன? ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்தார்; யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் யெகோவா வுக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்: சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும், யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

யோசுவா 22:21-27 பரிசுத்த பைபிள் (TAERV)

ரூபன், காத் மனாசே கோத்திரத்தினர், அந்தப் பதினொரு ஆட்களுக்கும் பதிலளித்தனர். அவர்கள், “கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம். நாங்கள் தேவனின் சட்டங்களை மீறினால், கர்த்தரே எங்களைத் தண்டிக்கட்டும். தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம். யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும். “எனவே இப்பலிபீடத்தைக் கட்டமுடிவெடுத்தோம். தகன பலிகளுக்கோ, மற்ற பலிகளுக்கோ இதைப் பயன்படுத்த நினைக்கவில்லை. நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றை கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.

யோசுவா 22:21-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக: தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்ளுவார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர். ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக. நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன? ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்: சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும், கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.