யோசுவாவின் புத்தகம் 22:21-27

யோசுவாவின் புத்தகம் 22:21-27 TAERV

ரூபன், காத் மனாசே கோத்திரத்தினர், அந்தப் பதினொரு ஆட்களுக்கும் பதிலளித்தனர். அவர்கள், “கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம். நாங்கள் தேவனின் சட்டங்களை மீறினால், கர்த்தரே எங்களைத் தண்டிக்கட்டும். தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம். யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும். “எனவே இப்பலிபீடத்தைக் கட்டமுடிவெடுத்தோம். தகன பலிகளுக்கோ, மற்ற பலிகளுக்கோ இதைப் பயன்படுத்த நினைக்கவில்லை. நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றை கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.