யோசுவா 22:21-27
யோசுவா 22:21-27 TCV
இதற்கு மறுமொழியாக ரூபன், காத், மனாசேயின் அரைப்பங்கு கோத்திரத்தார் அனைவரும், அங்கு வந்த இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுக்கு கூறியதாவது: “வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, அவர் அறிவார். அதை இஸ்ரயேலரும் அறிந்துகொள்ளட்டும்! யெகோவாவுக்கு எதிரான கலகமாய், அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமையாய் இது இருந்தால் இன்று எங்களைத் தப்பவிடவேண்டாம். யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்காகவும், தகன காணிக்கைகளையோ, தானியக் காணிக்கைகளையோ, அல்லது சமாதான காணிக்கைகளையோ பலியிடுவதற்காகவும் நாங்கள் எங்கள் சொந்தப் பலிபீடத்தைக் கட்டியிருந்தால், யெகோவா தாமே எங்களிடம் கணக்குக் கேட்கட்டும். “இல்லை! உங்கள் சந்ததிகள், எங்கள் சந்ததிகளிடம் ஒரு நாளைக்கு, ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ரூபனியரே! காத்தியரே! உங்களுக்கும் எங்களுக்கும் இடையே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார்; யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை’ என்று சொல்வார்கள் என்ற பயத்தினால் இதைச் செய்தோம். இவ்வாறு எங்களுடைய சந்ததிகள் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதை நிறுத்திவிட உங்கள் சந்ததிகள் காரணமாயிருப்பார்கள். “அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல; மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.

