எரேமியா 44:16-23

எரேமியா 44:16-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“யெகோவாவின் பெயரால் நீ எங்களுக்குக் கூறிய செய்தியை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை. ஆனால் வான அரசிக்கு நாங்கள் தூபம் செலுத்துவதையும் பானபலிகள் வார்ப்பதையும் நிறுத்தியதிலிருந்து, நாங்கள் எல்லாவற்றிலும் குறைவடைந்தோம். வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கிறோம்” என்றார்கள். மேலும் அங்கிருந்த பெண்கள், “நாங்கள் வான அரசிக்குத் தூபங்காட்டி, அவளுக்கு பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் அவளுடைய உருவமுள்ள அப்பங்களைச் சுட்டதையும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றியதையும் எங்கள் கணவன்மார் அறியாமலா இருந்தார்கள்?” என்று கேட்டார்கள். அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும், “யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் தெருக்களிலும், நீங்களும், உங்கள் தந்தையரும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், நாட்டு மக்களும் தூபங்காட்டியதைப் பற்றி யெகோவா தெரியாமலிருந்தாரா? உங்கள் கொடிய செயல்களையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும் யெகோவாவினால் சகிக்க முடியாமல் போயிற்று. அதனால்தான் யெகோவா உங்கள் நாட்டை இன்று இருப்பதுபோல் குடியில்லாமல் பாழடையச் செய்து, சாபத்திற்குள்ளாக்கினார். நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களையோ அவரது ஒழுங்குவிதிகளையோ அவர் சொன்னவற்றையோ கைக்கொள்ளாமலும் விட்டீர்கள். ஆகையால் இன்று நீங்கள் காணும் பேராபத்து உங்கள்மேல் வந்திருக்கிறது” என்றான்.

எரேமியா 44:16-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ யெகோவாவுடைய பெயரில் எங்களுக்குச் சொன்ன வார்த்தைகளின்படியே நாங்கள் உன் சொல்லைக் கேட்காமல், எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றுவோம்; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம். நாங்கள் வானராணிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றாமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து போனோம். மேலும் நாங்கள் வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றினபோது, நாங்கள் எங்கள் ஆண்களின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை ஊற்றி, அவளை வணங்கினோமோ என்றார்கள். அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த எல்லா மக்களாகிய ஆண் மற்றும் பெண்களையும் மற்ற அனைவரையும் நோக்கி: யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் மக்களும் காட்டின தூபங்களை அல்லவோ யெகோவா நினைத்துத் தம்முடைய மனதில் வைத்துக்கொண்டார். உங்கள் செயல்களின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், யெகோவா அப்புறம் பொறுத்திருக்க முடியாததினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியில்லாத வெட்டவெளியும் பாழும் சாபமுமானது. நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காமலும், அவருடைய வேதத்திற்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும், இணங்கி நடக்காமலும் போனதினால் இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்குச் சம்பவித்தது என்றான்.

எரேமியா 44:16-23 பரிசுத்த பைபிள் (TAERV)

“நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம். வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் ராஜாக்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் இராணியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை. ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர். பிறகு பெண்கள் பேசினார்கள். அவர்கள் எரேமியாவிடம், “நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்கள் அறிவார்கள். வானராக்கினிக்கு பலிகள் கொடுக்க எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளுக்குப் பானங்களின் காணிக்கை ஊற்ற எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளைப் போன்ற அப்பங்களை நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்களும் அறிவார்கள்” என்றனர். பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான். எரேமியா அந்த ஜனங்களிடம், “யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் நீங்கள், பலிகள் செய்ததை கர்த்தர் நினைவுப்படுத்தினார். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் அதிகாரிகளும், தேசத்தின் ஜனங்களும் இதனைச் செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கர்த்தர் நினைவுப்படுத்தினார். அதைப்பற்றி நினைத்தார். பிறகு கர்த்தருக்கு உங்களோடு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்த பயங்கரமான காரியங்களை கர்த்தர் வெறுத்தார். எனவே கர்த்தர் தேசத்தைக் காலியான வனாந்தரமாக்கினார். இப்பொழுது அங்கே எவரும் வாழவில்லை. மற்றவர்கள் அத்தேசத்தைப் பற்றி அருவருப்பாகப் பேசுகிறார்கள். அந்த தீமையெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டன. ஏனென்றால், நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்தீர்கள். கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள். நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரது போதனைகளையும் அவர் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் பின்பற்றவில்லை. உங்கள் உடன்படிக்கையின் பகுதியை நீங்கள் பாதுகாக்கவில்லை” என்று பதிலளித்தான்.

எரேமியா 44:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தைகளின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல், எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம். நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து போனோம். மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அநுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள். அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி: யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார். உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று. நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும், இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்