எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:16-23

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:16-23 TAERV

“நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம். வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் ராஜாக்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் இராணியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை. ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர். பிறகு பெண்கள் பேசினார்கள். அவர்கள் எரேமியாவிடம், “நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்கள் அறிவார்கள். வானராக்கினிக்கு பலிகள் கொடுக்க எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளுக்குப் பானங்களின் காணிக்கை ஊற்ற எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளைப் போன்ற அப்பங்களை நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்களும் அறிவார்கள்” என்றனர். பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான். எரேமியா அந்த ஜனங்களிடம், “யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் நீங்கள், பலிகள் செய்ததை கர்த்தர் நினைவுப்படுத்தினார். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் அதிகாரிகளும், தேசத்தின் ஜனங்களும் இதனைச் செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கர்த்தர் நினைவுப்படுத்தினார். அதைப்பற்றி நினைத்தார். பிறகு கர்த்தருக்கு உங்களோடு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்த பயங்கரமான காரியங்களை கர்த்தர் வெறுத்தார். எனவே கர்த்தர் தேசத்தைக் காலியான வனாந்தரமாக்கினார். இப்பொழுது அங்கே எவரும் வாழவில்லை. மற்றவர்கள் அத்தேசத்தைப் பற்றி அருவருப்பாகப் பேசுகிறார்கள். அந்த தீமையெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டன. ஏனென்றால், நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்தீர்கள். கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள். நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரது போதனைகளையும் அவர் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் பின்பற்றவில்லை. உங்கள் உடன்படிக்கையின் பகுதியை நீங்கள் பாதுகாக்கவில்லை” என்று பதிலளித்தான்.

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:16-23 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்