ஆபகூக் 3:11-19

ஆபகூக் 3:11-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும், சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன. கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர். கோபத்தில் பிற நாட்டு மக்களை மிதித்தீர். உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர். மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல, அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள். அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர். கடலை உமது குதிரைகளினால் மிதித்து, ஆற்றின் பெருவெள்ளத்தை பொங்கியெழப் பண்ணினீர். நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது. அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த, நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக, நான் பொறுமையுடன் காத்திருப்பேன். அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும், நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன், என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன். ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்; என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார், என்னை உயர்ந்த இடங்களில் நடக்கப் பண்ணுகிறார்.

ஆபகூக் 3:11-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர். உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா) என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர். திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர். நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.

ஆபகூக் 3:11-19 பரிசுத்த பைபிள் (TAERV)

சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன. அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன. மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப் போன்றும் உள்ளன. நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்; பல தேசங்களைத் தண்டித்தீர். நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, முக்கியமானவர்களானாலும் முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர். நீர் மோசேயின் கைத்தடியைப் பயன்படுத்தி பகை வீரர்களைத் தடுத்தீர். அவ்வீரர்கள் எனக் கெதிராகப் போரிட வல்லமைமிக்கப் புயலைப் போல் வந்தார்கள். ஒரு ஏழையை ரகசியமாகக் கொள்ளையிடுவது போல் எங்களை எளிதாக வெல்லமுடியுமென எண்ணினார்கள். ஆனால் நீர் உம் குதிரைகளை ஆழமான தண்ணீர் வழியாக மண்ணைக் கலங்கும்படி நடக்கச் செய்தீர். நான் அந்தக் கதையைக் கேட்டபோது என் உடல் முழுவதும் நடுங்கியது. நான் உரக்க பரிகசித்தேன். நான் என் எலும்புகளின் பலவீனத்தை உணர்ந்தேன். நான் அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன். எனவே நான் பகைவர் வந்து தாக்கும் அந்த அழிவின் நாளுக்காகக் காத்திருப்பேன். அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம். திராட்சைக்கொடிகளில் திராட்சைப் பழங்கள் வளராமலிருக்கலாம். ஒலிவ மரங்களில் ஒலிவ பழங்கள் வளராமலிருக்கலாம், வயல்களில் தானியம் விளையாமலிருக்கலாம், கிடையில் ஆட்டு மந்தைகள் இல்லாமல் இருக்கலாம், தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன். எனது இரட்சகரான தேவனில் நான் மகிழ்வேன். எனக்கு அதிகாரியான என் கர்த்தர் எனக்குப் பலத்தை கொடுக்கிறார். அவர் என்னை மானைப்போன்று ஓட உதவுகிறார். அவர் என்னைக் குன்றுகளில் பாதுகாப்பாக வழிநடத்துகிறார்.

ஆபகூக் 3:11-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர். உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா.) என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர். திரளான தண்ணீர்க் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர். நான் கேட்டபோது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.