ஆபகூக் 3:11-19

ஆபகூக் 3:11-19 TCV

உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும், சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன. கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர். கோபத்தில் பிற நாட்டு மக்களை மிதித்தீர். உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர். மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல, அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள். அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர். கடலை உமது குதிரைகளினால் மிதித்து, ஆற்றின் பெருவெள்ளத்தை பொங்கியெழப் பண்ணினீர். நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது. அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த, நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக, நான் பொறுமையுடன் காத்திருப்பேன். அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும், நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன், என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன். ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்; என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார், என்னை உயர்ந்த இடங்களில் நடக்கப் பண்ணுகிறார்.