ஆப 3:11-19

ஆப 3:11-19 IRVTAM

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர். உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா) என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர். திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர். நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.