2 நாளாகமம் 26:14-21
2 நாளாகமம் 26:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உசியா கேடயங்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், வில்லுகள், கவண்கற்கள் என்பவற்றை முழு இராணுவத்திற்கும் கொடுத்திருந்தான். அம்புகளை எய்யவும், பெரிய கற்களை வீசி எறியவும், எருசலேமில் கோபுரங்களிலிருந்தும் மூலைப் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் உபயோகிப்பதற்கு திறமையான மனிதர்களினால் இயந்திரங்களைச் செய்திருந்தான். அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. ஏனெனில் இறைவன் அவன் பலமுள்ளவனாகும்வரை உதவினார். ஆனால் உசியா பலமுடையவனான பின்பு, அவனுடைய அகந்தை அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருந்து தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான். ஆசாரியன் அசரியாவும், தைரியமான இன்னும் எண்பது யெகோவாவின் ஆசாரியரும் அவனைத் தொடர்ந்து உள்ளே போனார்கள். அவர்கள் அரசனுக்கு எதிர்முகமாகப் போய் நின்று, “உசியாவே, யெகோவாவுக்கு நறுமண தூபங்காட்டுவதற்கு உமக்குத் தகுதியில்லை. அது தூபங்காட்டுவதற்கென பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் சந்ததிகளான ஆசாரியருக்குரியது. பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறும். நீர் பாவம் செய்தீர். நீர் இறைவனாகிய யெகோவாவினால் கனப்படுத்தப்படமாட்டீர்” என்று சொன்னார்கள். தூபங்காட்டும்படி, தூப கலசத்தைக் கையில் வைத்திருந்த உசியா கோபங்கொண்டான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் தூபபீடத்திற்கு முன்பாக ஆசாரியருக்குமுன் கடுங்கோபத்துடன் நிற்கும்போதே அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி தோன்றியது. பிரதான ஆசாரியன் அசரியாவும் மற்ற ஆசாரியரும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி இருப்பதைக் கண்டார்கள். எனவே அவர்கள் விரைவாக அவனை வெளியேற்றினார்கள். உண்மையாகவே யெகோவா தன்னைத் துன்புறுத்தியபடியால் அவனும் உடனே வெளியேறினான். உசியா அரசன் தான் சாகும் நாள்வரை குஷ்டவியாதி உடையவனாகவே இருந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவனாக குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான். அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான்.
2 நாளாகமம் 26:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான். கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது. அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் யெகோவாவின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து, ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, யெகோவாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள். அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான். ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
2 நாளாகமம் 26:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)
உசியா படைக்குக் கேடயங்கள், ஈட்டிகள், தலைகவசங்கள், மார்க்கவசங்கள், வில்கள், கவண்களுக்குக் கற்கள் ஆகியவற்றைக் கொடுத்தான். எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான். இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறிந்தன. இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான். வெகு தொலை நாடுகளிலுள்ள ஜனங்களும் இவனைப்பற்றி அறிந்துகொண்டனர். அதிகமான உதவியைப் பெற்று அவன் வலிமைமிக்க ஒரு ராஜாவானான். ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். அசரியா என்ற ஆசாரியனும் கர்த்தருடைய ஆசாரியர்களுள் தைரியமிக்க 80 ஆசாரியர்களும் உசியாவைப் பின்தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்றனர். அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர். இதனால் உசியா கோபம் கொண்டான். அவன் தன் கையில் நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு கலசத்தை வைத்திருந்தான். அத்தோடு அவன் ஆசாரியர்களோடு கோபமாகப் பேசியபோது அவன் நெற்றியில் தொழுநோய் தோன்றியது. இது ஆசாரியர்களுக்கு முன்பாக கர்த்தருடைய ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் நறுமணப் பொருட்களை எரிக்கும்போது நடந்தது. தலைமை ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான். உசியா எனும் ராஜா தொழுநோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது குமாரனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.
2 நாளாகமம் 26:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான். கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று. அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள். அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான். ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.