2 நாளா 26:14-21
2 நாளா 26:14-21 IRVTAM
இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான். கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது. அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் யெகோவாவின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து, ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, யெகோவாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள். அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான். ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.

