2 நாளாகமம் 26:14-21

2 நாளாகமம் 26:14-21 TCV

உசியா கேடயங்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், வில்லுகள், கவண்கற்கள் என்பவற்றை முழு இராணுவத்திற்கும் கொடுத்திருந்தான். அம்புகளை எய்யவும், பெரிய கற்களை வீசி எறியவும், எருசலேமில் கோபுரங்களிலிருந்தும் மூலைப் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் உபயோகிப்பதற்கு திறமையான மனிதர்களினால் இயந்திரங்களைச் செய்திருந்தான். அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. ஏனெனில் இறைவன் அவன் பலமுள்ளவனாகும்வரை உதவினார். ஆனால் உசியா பலமுடையவனான பின்பு, அவனுடைய அகந்தை அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருந்து தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான். ஆசாரியன் அசரியாவும், தைரியமான இன்னும் எண்பது யெகோவாவின் ஆசாரியரும் அவனைத் தொடர்ந்து உள்ளே போனார்கள். அவர்கள் அரசனுக்கு எதிர்முகமாகப் போய் நின்று, “உசியாவே, யெகோவாவுக்கு நறுமண தூபங்காட்டுவதற்கு உமக்குத் தகுதியில்லை. அது தூபங்காட்டுவதற்கென பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் சந்ததிகளான ஆசாரியருக்குரியது. பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறும். நீர் பாவம் செய்தீர். நீர் இறைவனாகிய யெகோவாவினால் கனப்படுத்தப்படமாட்டீர்” என்று சொன்னார்கள். தூபங்காட்டும்படி, தூப கலசத்தைக் கையில் வைத்திருந்த உசியா கோபங்கொண்டான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் தூபபீடத்திற்கு முன்பாக ஆசாரியருக்குமுன் கடுங்கோபத்துடன் நிற்கும்போதே அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி தோன்றியது. பிரதான ஆசாரியன் அசரியாவும் மற்ற ஆசாரியரும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி இருப்பதைக் கண்டார்கள். எனவே அவர்கள் விரைவாக அவனை வெளியேற்றினார்கள். உண்மையாகவே யெகோவா தன்னைத் துன்புறுத்தியபடியால் அவனும் உடனே வெளியேறினான். உசியா அரசன் தான் சாகும் நாள்வரை குஷ்டவியாதி உடையவனாகவே இருந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவனாக குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான். அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான்.