1 சாமுவேல் 23:14-23

1 சாமுவேல் 23:14-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது காடுகளிலுள்ள கோட்டைகளிலும், சீப் பாலைவனத்திலுள்ள குன்றுகளிலும் தங்கியிருந்தான். சவுல் அவனை அனுதினமும் தேடினான். இறைவனோ தாவீதை அவனின் கைகளில் ஒப்படைக்கவில்லை. தாவீது சீப் பாலைவனத்திலுள்ள கொரேஷில் இருந்தபோது சவுல் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்பதை அறிந்தான். அவ்வேளையில் சவுலின் மகனாகிய யோனத்தான் கொரேஷிலிருந்த தாவீதிடம்போய் இறைவனில் பலம்கொள்ளும்படி அவனுக்கு உதவி செய்தான். யோனத்தான் தாவீதிடம், “பயப்படாதே; என் தகப்பன் சவுல் உன்மேல் கைவைக்க மாட்டார்; நீ இஸ்ரயேலருக்கு அரசனாவாய். நான் உனக்கு இரண்டாவதாய் இருப்பேன். இவையெல்லாம் என் தகப்பனுக்குக்கூட தெரியும்” என்றான். அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்தார்கள். யோனத்தான் தன் வீட்டுக்குப் போனான். தாவீதோ கொரேஷிலேயே தங்கினான். அதன்பின் சீப்பூராரில் சிலர் கிபியாவிலிருந்த சவுலிடம் போய், “தாவீது எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள ஆகிலா குன்றிலுள்ள கொரேஷின் கோட்டைகளில் எங்கள் மத்தியில் ஒளிந்திருக்கிறான் அல்லவா? இப்பொழுது அரசே, நீர் விரும்பியபோது வாரும்; அவனை அரசனிடம் ஒப்புக்கொடுப்பது எங்கள் பொறுப்பு” என்றார்கள். அதற்கு சவுல், “நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அங்கேபோய் மேற்கொண்டு ஆயத்தங்களைச் செய்யுங்கள். தாவீது வழக்கமாய் எங்கே போகிறான் என்றும், அங்கே அவனைக் கண்டவர்கள் எவரென்றும் விசாரித்து, யாவற்றையும் அறிவியுங்கள். அவன் மிக தந்திரமுள்ளவன் எனக் கேள்விப்படுகிறேன். நீங்கள் அவன் இருக்கும் மறைவிடங்கள் அனைத்தையும் அறிந்து, தெளிவான செய்தியுடன் என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்களுடன் வந்து, அந்தப் பகுதியில் அவன் இருந்தால் யூதா வம்சங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.

1 சாமுவேல் 23:14-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீது வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தங்கியிருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. தன்னுடைய உயிரை வாங்கத் தேடும்படி, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியால், தாவீது சீப் வனாந்திரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம்; என்னுடைய தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்காது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாக இருப்பேன்; அப்படி நடக்கும் என்று என்னுடைய தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான். பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா? இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள். அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது. அவன் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடு வந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரம் பேருக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.

1 சாமுவேல் 23:14-23 பரிசுத்த பைபிள் (TAERV)

பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை. சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். ஆனால் சவுலின் குமாரனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் ராஜா ஆவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான். யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான். சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது. இப்போது ராஜாவே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள். சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார், யார் வந்து சந்திக்கின்றனர். ‘தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான்’ என்று நினைத்தான். தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.

1 சாமுவேல் 23:14-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கைபண்ணின பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான். பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள், அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது. அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்