சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:14-23
சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:14-23 TAERV
பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை. சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். ஆனால் சவுலின் குமாரனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் ராஜா ஆவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான். யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான். சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது. இப்போது ராஜாவே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள். சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார், யார் வந்து சந்திக்கின்றனர். ‘தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான்’ என்று நினைத்தான். தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.

