1 சாமுயேல் 23:14-23

1 சாமுயேல் 23:14-23 TCV

தாவீது காடுகளிலுள்ள கோட்டைகளிலும், சீப் பாலைவனத்திலுள்ள குன்றுகளிலும் தங்கியிருந்தான். சவுல் அவனை அனுதினமும் தேடினான். இறைவனோ தாவீதை அவனின் கைகளில் ஒப்படைக்கவில்லை. தாவீது சீப் பாலைவனத்திலுள்ள கொரேஷில் இருந்தபோது சவுல் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்பதை அறிந்தான். அவ்வேளையில் சவுலின் மகனாகிய யோனத்தான் கொரேஷிலிருந்த தாவீதிடம்போய் இறைவனில் பலம்கொள்ளும்படி அவனுக்கு உதவி செய்தான். யோனத்தான் தாவீதிடம், “பயப்படாதே; என் தகப்பன் சவுல் உன்மேல் கைவைக்க மாட்டார்; நீ இஸ்ரயேலருக்கு அரசனாவாய். நான் உனக்கு இரண்டாவதாய் இருப்பேன். இவையெல்லாம் என் தகப்பனுக்குக்கூட தெரியும்” என்றான். அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்தார்கள். யோனத்தான் தன் வீட்டுக்குப் போனான். தாவீதோ கொரேஷிலேயே தங்கினான். அதன்பின் சீப்பூராரில் சிலர் கிபியாவிலிருந்த சவுலிடம் போய், “தாவீது எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள ஆகிலா குன்றிலுள்ள கொரேஷின் கோட்டைகளில் எங்கள் மத்தியில் ஒளிந்திருக்கிறான் அல்லவா? இப்பொழுது அரசே, நீர் விரும்பியபோது வாரும்; அவனை அரசனிடம் ஒப்புக்கொடுப்பது எங்கள் பொறுப்பு” என்றார்கள். அதற்கு சவுல், “நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அங்கேபோய் மேற்கொண்டு ஆயத்தங்களைச் செய்யுங்கள். தாவீது வழக்கமாய் எங்கே போகிறான் என்றும், அங்கே அவனைக் கண்டவர்கள் எவரென்றும் விசாரித்து, யாவற்றையும் அறிவியுங்கள். அவன் மிக தந்திரமுள்ளவன் எனக் கேள்விப்படுகிறேன். நீங்கள் அவன் இருக்கும் மறைவிடங்கள் அனைத்தையும் அறிந்து, தெளிவான செய்தியுடன் என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்களுடன் வந்து, அந்தப் பகுதியில் அவன் இருந்தால் யூதா வம்சங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.